அலட்டிக்கொள்ளாமல் முன்னேறிய மேன்சிட்டி

அலட்டிக்கொள்ளாமல் முன்னேறிய மேன்சிட்டி

2 mins read
4b331cf2-97f7-49ec-83f1-cd499c9bba7a
மேன்சிட்டி குழுவின் முதல் கோலை அடிக்கும் ஒட்டாமெண்டி (இடமிருந்து 2வது). படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சௌத்ஹேம்டன் குழுவை நேற்று அதிகாலை எதிர்கொண்ட மான்ெசஸ்டர் சிட்டி குழு அலட்டிக்ெகாள்ளாமல் ஆடி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இரண்டு கோல்கள் போட்டு முன்னிலை பெற்று இறுதியில் 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் செளத்ஹேம்டன் குழுவை அது வீழ்த்தியது.

கடந்த ஞாயிறன்று ஆஸ்டன் வில்லா குழுவை வீழ்த்திய அணியிலிருந்து மேன்சிட்டி நிர்வாகியான பெப் கார்டியோலா ஒன்பது மாற்றங்களைச் செய்தார்.

சென்ற நான்கு கற்பந்துப் பருவங்களில் மூன்று முறை லீக் கிண்ணத்தை வென்ற மேன்சிட்டி, நேற்று களமிறங்கியதும் சென்ற வாரம் லெஸ்டர் சிட்டி 9-0 என செளத்ஹேம்டன் குழுவை நசுக்கியதை நினைவில் நிறுத்திய மேன்சிட்டி ரசிகர்கள், "எங்களுக்கு பத்து கோல்கள் வேண்டும்," என முழக்கமிடத் தொடங்கினர்.

அந்த எண்ணிக்கையைத் தொடவோ தாண்டவோ முடியாது என்பது நன்கு தெரிந்திருந்தாலும் ஆட்டம் தொடங்கிய 20 நிமிடங்களிலேயே மேன்சிட்டியின் முதல் கோலை போட்டார் நிக்கலஸ் ஒட்டாமெண்டி.

பின்னர் ஆட்டத்தின் 38ஆம் நிமிடத்தில் கைல் வாக்கர் தந்த பந்தை மேன்சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ கோலாக்கினார்.

ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் ெசளத்ஹேம்டன் தனது பங்குக்கு ஒரு கோல் போட்டாலும் தரவரிசைப் பட்டியலில் கீழ்நிலையில் அக்குழு இருப்பதால் அதன் நிர்வாகியான ரால்வ் ஹெசன்ஹுட்டல் எந்நேரமும் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற யூகம் நிலவுகிறது.

இது இப்படி இருக்க, பிரிமியர் லீக் போட்டி ஒன்றில் மீண்டும் இவ்வாரக் கடைசியில் மான்செஸ்டர் சிட்டியை எதிர்கொள்ள வேண்டிய அவலம் செளத்ஹேம்டனுக்கு இருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

மற்றோர் ஆட்டத்தில் எவர்ட்டன் குழு வாட்ஃபர்ட் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. இதன்மூலம் நெருக்கடியில் உள்ள எவர்ட்டன் குழுநிர்வாகி மார்க்கோ சில்வாவுக்கு சற்று ஆறுதல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வேறோர் போட்டியில் மூன்றாம் நிலைக் காற்பந்துக் குழுவான ஆக்ஸ்ஃபர்ட் குழு, அதே மூன்றாம் நிலைக் குழுவான சண்டர்லேண்டுடன் மோதிய ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது. பின்னர் இடம்பெற்ற பெனால்டி வாய்ப்புகளில் ஆக்ஸ்ஃபர்ட் குழு, சண்டர்லேண்ட் குழுவை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றோர் போட்டியில் நான்காம் நிலைக் குழுக்களான கோல்செஸ்டர், கிராலி ஆகியவை மோதின. இதில் கோல்செஸ்டர் குழு 3-1 என்ற கோல் கணக்கில் வெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.