லிவர்பூல்: இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு லிவர்பூல் தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூலும் ஆர்சனலும் மோதின. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தில் மொத்தம் பத்து கோல்கள் போடப்பட்டன. இரு குழுக்களும் தரப்புக்கு ஐந்து கோல்கள் போட்டது அதைவிட ஆச்சரியம். 90 நிமிடங்ளுக்குப் பிறகு ஆட்டம் 5-5 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததால் பெனால்டி ஷூட்அவுட் நடத்தப்பட்டது. இதில் லிவர்பூல் 5-4 என வாகை சூடியது.
ஆட்டத்துக்கு முன்பு இரு குழுக்களிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. வழக்கமாகக் களமிறங்கும் ஆட்டக்காரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. களமிறங்கிய இளம் ஆட்டக்காரர்கள் சக்கைப்போடு போட ஆட்டம் களைகட்டியது.
ஆட்டம் தொடங்கி ஆறு நிமிடங்களிலேயே லிவர்பூல் முன்னிலையைப் பெற்றது. அலெக்ஸ் ஒக்ஸ்லேட் சேம்பர்லேன் பெனால்டி எல்லைக்குள் அனுப்பிய பந்தை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆர்சனலின் முஸ்தாஃபி முயன்றார். ஆனால் பந்து அவரது காலில் பட்டு வலைக்குள் சென்று சொந்த கோலானது.
லிவர்பூலுக்காக வழக்கமாகக் களமிறங்கும் நட்சத்திர தற்காப்பு ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் ஆர்சனல் ஆட்டத்தைச் சமன்செய்தது. வலை நோக்கி அனுப்பப்பட்ட பந்தை லிவர்பூல் கோல்காப்பாளர் தட்டிவிட, லிவர்பூல் தற்காப்பு ஆட்டக்காரர்கள் அதை நெருங்கு
வதற்குள் வலைக்குள் சேர்த்தார் லூக்கஸ் டொரேரா.
அதன் பிறகு 26வது நிமிடத்தில் ஆர்சனல் கோல் போட்டது. பத்து நிமிடங்கள் கழித்து, லிவர்பூலின் தற்காப்பில் ஏற்பட்ட குளறுபடியைப் பயன்படுத்தி ஆர்சனலின் மார்டினேலி கோல் அடித்தார்.
43வது நிமிடத்தில் லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதைப் பயன்படுத்தி கோல் போட்டார் ஜேம்ஸ் மில்னர். இடைவேளையின்போது 3-2 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் ஜேம்ஸ் மில்னர் செய்த பிழையைப் பயன்படுத்தி ஆர்சனல் அதன் நான்காவது கோலைப் போட்டது. துவண்டுவிடாமல் போராடிய லிவர்பூல் நான்கு நிமிடங்கள் கழித்து கோல் போட்டது. ஒக்ஸ்லேட் சேம்பர்லேன் தூரத்திலிருந்து அனுப்பிய பந்து கண்ணிமைக்கும் நேரத்தில் வலையைத் தொட்டது.
ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் ஒரிகி போட்ட அபார கோல் ஆட்டத்தைச் சமன் செய்தது. ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் ஆர்சனலை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு சென்றார் வில்லோக். பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து பந்தை அவர் உதைக்க, அது மின்னல் வேகத்தில் லிவர்பூல் கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலைக்குள் புகுந்தது.
66 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அதன் சொந்த விளையாட்டரங்கத்தில் முதல்
முறையாக ஐந்து கோல்களை விட்டது குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் முடிய வினாடிகளே எஞ்சியிருந்தபோது ஒரிகியின் அட்டகாசமான கோல் ஆட்டத்தை சமநிலையில் முடிய வைத்தது.
அதன் பிறகு நடைபெற்ற பெனால்டி ஷூட்அவுட்டில் லிவர்பூல் அதன் ஐந்து பெனால்டிகளையும் கோலாக்கியது. ஆனால் ஆர்சனல் ஒரு பெனால்டியைத் தவறவிட்டது. இதன்மூலம் லிவர்பூல் வெற்றி பெற்றது.
மற்றோர் ஆட்டத்தில் செல்சியை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடெட் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
யுனைடெட்டின் இரண்டு கோல்களையும் மார்கஸ் ரேஷ்ஃபர்ட் போட்டார்.

