வரலாறு படைக்க காத்திருக்கும் சியா கொலிசி

வரலாறு படைக்க காத்திருக்கும் சியா கொலிசி

1 mins read
a3f0da12-7d5a-45a7-bd2a-317578b05b71
-

தோக்கியோ: உலகக் கிண்ண ரக்பி போட்டியின் இறுதி ஆட்டம் நாளை ஐப்பானில் நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

1995ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா கிண்ணம் ஏந்தியபோது நெல்சன் மண்டேலாவும் வெற்றி அணியுடன் இருந்தார்.

அதையடுத்து, 2007ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகக் கிண்ண ரக்பி போட்டியிலும் தென்னாப்பிரிக்கா கிண்ணத்தைக் கைப்பற்றியது.

12 ஆண்டுகள் கழித்து, மீண்டும் கொண்டாட்ட மழையில் நனைய 'ஸ்பிரிங்போக்ஸ்' எனச் செல்லமாக அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க ரக்பி குழுவுக்குப் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாது, இம்முறை கிண்ணத்தை தென்னாப்பிரிக்கா வென்றால் அதை அணித் தலைவர் சியா கொலிசி ஏந்துவார்.

அவ்வாறு நடந்தால் ரக்பியின் உலகக் கிண்ணத்தை ஏந்தும் முதல் கறுப்பின அணித் தலைவர் எனும் பெருமை கொலிசியைச் சேரும்.

"சனிக்கிழமையன்று சியா உலகக் கிண்ணத்தைத் தொட்டால், 1995ஆம் ஆண்டில் எங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத , மகிழ்ச்சியான நினைவுகளைவிட இன்னும் அதிகமான கொண்டாட்டத்தில் நாங்கள் மூழ்கிவிடுவோம்," என்று 2007ஆம் ஆண்டில் கிண்ணத்தை ஏந்திய தென்னாப்பிரிக்காவின் அப்போதைய அணித் தலைவர் ஜான் ஸ்மிட் கூறினார்.

சியா கொலிசி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரை அவரது பாட்டிதான் வளர்த்தார். அவர் 15 வயதாக இருந்தபோது அவரது தாயார் இறந்தார். சிறிது காலம் கழித்து, அவரது பாட்டியும் மரணமடைந்தார் தென்னாப்பிரிக்காவின் பழைய 'அர்ப்பதைட்' எனப்படும் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்பு கொலிசி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.