புதுடெல்லி: இந்தியா, பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி விளையாட்டரங்கில் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலிகூறியுள்ளார்.
டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் போட்டியை அங்கு நடத்த எதிர்ப்புத் தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கங்குலிக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும் இப்போதைய பாஜக எம்.பி.யுமான கௌதம் காம்பீர், "கிரிக்கெட்டைவிட காற்று மாசுபாட்டையே டெல்லிவாசிகள் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்," என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், திட்டமிட்டபடி போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆயினும், எதிர்காலத்தில் போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கும்போது, குறிப்பாக குளிர்காலத்தில் வடஇந்தியாவில் போட்டிகளை நடத்தத் திட்டமிடுவதில் நடைமுறைச் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

