மான்செஸ்டர்: எதிரணி மைதானத்தில் ஒருவழியாக வெற்றிகளைப் பெறத் தொடங்கியுள்ள மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு இன்று போர்ன்மத் குழுவுக்கு எதிரான ஆட்டத்திற்கு தனது வீரர்கள் உடற்தகுதி பெற வேண்டுமே என்ற தவிப்பில் உள்ளது. லீக் கிண்ண போட்டியில் வியாழக்கிழமை அதிகாலை செல்சி குழுவுடன் மோதிய யுனைடெட் குழுவின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட், லிண்டலோஃப், மெக்வாயர் ஆகியோர் காயமடைந்தனர்.
ஏற்கெனவே, காயம் காரணமாக பால் போக்பா, லூக் ஷா, நிமன்யா மாட்டிச், ஏக்ஸல் துவான்சபே ஆகியோர் விளையாட முடியாத நிலையில் தற்பொழுது மேலும் மூவர் காயமடைந்திருப்பது யுனைடெட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த யுனைடெட் நிர்வாகி சோல்சியார், "இன்னும் கால அவகாசம் உள்ளது. போர்ன்மத்துக்கு எதிரான போட்டிக்கு அவர்கள் தயார்நிலையில் இருப்பார்களா என்று பார்க்க வேண்டியுள்ளது," என்று கூறினார்.
யுனைடெட்டின் தாக்குதல் ஆட்டக்காரரான ரேஷ்ஃபர்ட் நான்கு ஆட்டங்களில் நான்கு கோல்கள் போட்டு எதிரணி மைதானத்தில் மூன்று வெற்றிகளுக்கு வித்திட்டுள்ளார். நான்காவது வெற்றியை நோக்கி யுனைடெட் செல்லும் நேரத்தில் கடந்த ெசப்டம்பர் மாதத்தில் இருந்து போர்ன்மத் குழு எந்தப் போட்டியிலும் வென்றதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றிரவு நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் குழு, ஆஸ்டன் வில்லாவுடன் பொருத உள்ளது.
இந்த ஆட்டத்தில் மத்தியத் திடல் வீரர் பேஃபினோவிற்கு ஓய்வளிப்பதா இல்லையா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் கூறியுள்ளார். அதே நேரத்தில், ஆஸ்டன் வில்லா போன்ற குழுக்களுடன் விளையாடும்போது சவால்கள் இல்லாமல் இராது என்றும் அதை வீரர்களும் அறிந்திருப்பர் என்றும் அவர் சொன்னார்.

