இந்தியா-பங்ளாதேஷ் இன்று மோதல்

இந்தியா-பங்ளாதேஷ் இன்று மோதல்

2 mins read

புதுடெல்லி: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-பங்ளாதேஷ் அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு டி20 தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா அணித் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. தற்காலிக அணித் தலைவர் ரோகித் சர்மா, தவான், மனிஷ் பாண்டே, ஷிரேயாஸ் ஐயர், குர்ணல் பாண்டியா, ரி‌ஷப் பன்ட், தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

புதுமுக ஆல்ரவுண்டர் ஷிலும் துபே அணிக்குத் தேர்வாகி உள்ளார்.

அவருக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி அண்மையில் தென்னாப்பிரிக்காவுடன் டி20 தொடரைச் சமன்செய்து இருந்தது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்குக் கூடுதல் பலமாகும்.

பங்ளாதேஷ் அணியின் முன்னணி வீரரும் அணித் தலைவருமான ஷகீப்-அல்-ஹசன் இல்லாதது அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சூதாட்ட தரகர் அணுகியதை ஐசிசியிடம் தெரிவிக்காததால் அவருக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகமதுல்லா தலைமையிலான அணியில் முஷ்ஃபிகுர் ரகீம், முஷ்டாபிகர் ரகுமான், மொஸ்டக் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

பங்ளாதேஷ் அணி அண்மையில் சொந்த நாட்டில் நடந்த 3 நாடுகள் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் இணைந்து பட்டம் பெற்றது.

டெல்லியில் கடுமையான காற்று மாசு இருப்பதால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.

காற்று மாசு காரணமாக டெல்லி போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி அங்கு தான் நடக்குமா என்ற அச்சம் நிலவுகிறது.

பங்ளாதேஷ் அணியின்

பயிற்றுவிப்பாளர் காற்று மாசு பெரிய பிரச்சினை இல்லை என்று தெரிவித்துள்ளார். பங்ளாதேஷ் வீரர்கள் முகக்கவசம் அணிந்துதான் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கு கிறது.

இந்தியா: ரோகித் சர்மா (அணித் தலைவர்), தவான், கே.எல்.ராகுல், ஷிரேயாஸ் ஐயர், ரி‌ஷப் பன்ட், மனீஷ் பாண்டே, குர்ணால் பாண்டியா, சஞ்சு சாம்சன், கலீல் அகமது, யசுவேந்திர சாஹல், தீபக் சாஹர், ராகுல் சாகர், ‌ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.

பங்ளாதேஷ்: மகமதுல்லா (அணித் தலைவர்), லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முகம்மது நயீம், முஷ்ஃபிகுர் ரகீம், அதீப் உசேன், மொஸ்டக் உசேன், அமினுல் இஸ்லாம், அரபாத் சன்னி, அல்-அமின் உசேன், முஷ்டாபிசுர் ரகுமான், ஷீசைபுல் இஸ்லாம், முகம்மது மிதுன், தஜில இஸ்லாம், அபு ஹைதா.