வாட்ஃபர்ட்: தாக்குதல் வீரர் டேமி ஆபிரகாமின் அதிரடி ஆட்டத்தால் வாட்ஃபர்டைப் பந்தாடிய செல்சி, இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
நேற்று அதிகாலை வாட்ஃபர்ட்டின் சொந்த மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றது.
சக வீரர் ஜோர்ஜினோவிடம் இருந்து வந்த பந்தை ஐந்தாவது நிமிடத்தில் வாட்ஃபர்ட் குழுவின் கோல்காப்பாளர் ஃபோஸ்டரைத் தாண்டி வலைக்குள் செலுத்தி அசத்தினார் டேமி ஆபிரகாம்.
இதன்மூலம் இப்பருவத்தில் ஆக அதிகமாக ஒன்பது கோல்கள் போட்ட லெஸ்டர் சிட்டி வீரர் ஜேமி வார்டி, சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ ஆகியோரோடு இணைந்துள்ளார் ஆபிரகாம்.
செல்சியிடம் முதல் கோலைப் பறிகொடுத்த பிறகு, சுதாரித்துக்கொண்ட வாட்ஃபர்ட் கோல்காப்பாளர், செல்சி வீரர்களின் கோல் முயற்சிகளைச் சிறப்பாக தடுத்தாடினார்.
டேமி ஆபிரகாம், கிறிஸ்டியன் புலிசிச், மேசன் மவுண்ட் ஆகியோரின் கோல் முயற்சிகளைத் தடுத்து செல்சியின் வெற்றியைத் தாமதப்படுத்தினார் ஃபோஸ்டர்.
ஆனால், சளைக்காமல் விளையாடிய புலிசிச், டேமி ஆபிரகாம் கொடுத்த பந்தை 55வது நிமிடத்தில் வாட்ஃபர்ட் கோல்காப்பாளரை ஏமாற்றி வலைக்குள் அனுப்பி, செல்சியின் வெற்றியை உறுதி செய்தார்.
80வது நிமிடத்தில் கிடைத்த 'ப்ரீ கிக்' வாய்ப்பில் கோல் போட்டு ஆறுதல் அடைந்தது வாட்ஃபர்ட்.
இதன்மூலம் இபிஎல் தொடரில் வாட்ஃபர்ட் குழுவால் இன்னமும் முதல் வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் போனது.
வெற்றியின் காரணமாக செல்சியோ இரண்டாவது இடத்தில் இருக்கும் சிட்டியுடனான புள்ளிகள் இடைவெளியை இரண்டாகக் குறைத்துள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 0-1 என போர்ன்மத் குழுவிடம் மண்ணைக் கவ்வியது.
இதனால் கடந்த மூன்று ஆட்டங்களாக மேன்யூ பெற்று வந்த தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய மேன்யூ நிர்வாகி சோல்சியார், "மேன்யூவிற்கு இது பெரும் பின்னடைவு. ஆனால் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து முன்னேறிச் செல்வோம்," என்றார்.
ஆர்சனல், உல்வ்ஸ் குழுக்கள் மோதிய ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்தது.

