வெலன்சியா: ஸ்பானிய லா லீகா காற்பந்தாட்டம் ஒன்றில் பார்சிலோனா கோல்களை விட்டுக் கொடுக்க நேர்ந்ததால் லெவான்டே 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிற்பாதி ஆட்டத்தில் வெறும் ஏழு நிமிடங்களில் மூன்று கோல்களைப் புகுத்தியது லெவான்டே.
முன்னதாக 38வது நிமிடத்தில் மெஸ்ஸியின் கோலால் முன்னிலை பெற்றது பார்சிலோனா.
காயம் காரணமாக சுவாரெஸ் வெளியேறியதைத் தொடர்ந்து பிற்பாதியில் தடுமாறத் தொடங்கியது பார்சிலோனா.
இதன் காரணமாக எதிரணியின் கோல்களை வாங்கிக் கட்டிக் கொண்டது. 61வது நிமிடத்தில் பார்சிலோனாவின் ஒற்றை கோலை சமன் செய்த லெவான்டே, அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு திக்குமுக்காட வைத்தது.
பார்சிலோனாவிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மெஸ்ஸி மீண்டும் வலைக்குள் பந்தை உதைத்த போதும் அது காணொளி உதவி நடுவர் முறை மூலம் 'ஆஃப்சைட் கோல்' என நிராகரிக்கப்பட்டது.
இன்னோர் ஆட்டத்தில் ரியால் பெட்டிஸ் குழுவிடம் சமநிலை மட்டுமே காண முடிந்ததால் லா லீகா பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டது ரியால் மட்ரிட். இந்த ஆட்டம் கோல் ஏதும் இன்றிச் சமநிலை கண்டது.
பார்சிலோனா, ரியால் மட்ரிட் குழுக்கள் தலா 22 புள்ளிகள் எடுத்திருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பார்சிலோனா பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.

