ஆறாவது எஃப்1 பட்டத்தைத் தட்டிச் சென்ற ஹேமில்டன்

ஆறாவது எஃப்1 பட்டத்தைத் தட்டிச் சென்ற ஹேமில்டன்

1 mins read
6c9adb5c-5ed6-4534-9bbf-8c24d1c39daa
-

ஆஸ்டின்: எஃப் 1 கார் பந்தயத்தின் மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை லூவிஸ் ஹேமில்டன் ஆறாவது முறையாக வென்றுள்ளார். ஃபெராரி அணியின் ஓய்வுபெற்ற மைக்கல் ஷூமாக்கர் ஏழு முறை மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.

அவருக்கு அடுத்து ஆக அதிக முறை பட்டம் வென்ற பெருமை ஹேமில்டனைச் சேரும்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமெரிக்க எஃப்1 பந்தயத்தில் மெர்செடிஸ் அணியின் ஹேமில்டன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மெர்செடிஸ் அணியின் மற்றொரு வீரரான வால்ட்டேரி போட்டாஸ் முதலிடத்தைப் பிடித்தார்.

ரெட் புல் அணியின் மேக்ஸ் வெஸ்டர்பன் மூன்றாவது இடத்திலும் ஃபெராரி அணியின் சார்ல்ஸ் லெக்லர்க் நான்காவது இடத்திலும் பந்தயத்தை முடித்துக்கொண்டனர்.

"சவால்மிக்க பந்தயமாக இருந்தது. வால்ட்டேரி சிறப்பாகச் செயல்பட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். மெர்செடிஸ் அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினேன். பந்தயத்தில் என்னால் ஆன அனைத்தையும் செய்தேன். முயற்சியைக் கைவிடக்கூடாது என்று நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தை எனக்கு அறிவுரை கூறினார்," என்று ஹேமில்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.