லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவும் எவர்ட்டன் குழுவும் நேற்று முன்தினம் மோதின. இதில் இருகுழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.
முற்பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.
பிற்பாதி ஆட்டம் தொடங்கி ஏறத்தாழ 15 நிமிடங்களில் எவர்ட்டன் தற்காப்பு ஆட்டக்காரர் செய்த தவற்றைப் பயன்படுத்தி கோல் போட்டார் ஸ்பர்சின் டெலி அலி.
கோல் போட்ட சிறிது நிமிடங்களில், தற்காப்பில் ஈடுபட்ட டெலி அலி தமது சொந்த பெனால்டி எல்லைக்குள் இருந்தபோது பந்தைத் அவர் கையால் தொட்டதாகக் கூறி தங்களுக்கு பெனால்டி வழங்கப்பட வேண்டும் என்று எவர்ட்டன் ஆட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
ஆனால் எவர்ட்டனின் கோரிக்கையை நடுவர் ஏற்க மறுத்தார்.
ஆட்டம் முடிய ஒருசில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்தபோது எவர்ட்டனின் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய டுசன் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தார்.
அவர் தலையால் முட்டிய பந்து வலையைத் தீண்ட, இரு குழுக்களும் தலா ஒரு புள்ளி பெற்றன.
ஆனால் இந்த ஆட்டத்தில் நடக்கக்கூடாத ஒன்று நடந்தது. ஒரு கட்டத்தில் ஸ்பர்ஸ் முன்னிலை வகித்தபோது ஆட்டத்தைச் சமன்செய்ய எவர்ட்டன் கடுமையாகப் போராடியது. எவர்ட்டனின் ஆண்ட்ரே கோமேசிடம் பந்து இருந்தபோது ஸ்பர்சின் தென்கொரிய நட்சத்திர வீரர் சோன் ஹியூங் மின் அவரிடமிருந்து பந்தைப் பறிக்க முற்பட்டார்.
பந்தைப் பறிக்க அவர் கோமேசை நோக்கிப் பாய்ந்தபோது அவரது கால்கள் கோமேசின் வலது கணுக்கால் மீது பட்டன. கீழே விழுந்த கோமேஸ் அலறிக்கொண்டே துடிதுடித்ததைப் பார்த்து திடலிலும் அரங்கத்திலும் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கோமேசின் கணுக்கால் எழும்பில் மிக மோசமான முறிவு ஏற்பட்டது அப்போதுதான் தெரிந்தது. கோமேசுக்கு மற்ற எவர்ட்டன் ஆட்டக்காரர்கள் ஆறதல் கூற முயல, அவர் வலியால் அங்கும் இங்கும் உருண்டு வலி தாங்காமல் கத்தி அழுதார்.
இதைச் சற்றும் எதிர்பாராத சோன்னைக் குற்ற உணர்வு ஆட்கொள்ள, பிரமை பிடித்தவர் போல தமது தலையை இரு கைகளால் பிடித்துக்கொண்டு நடப்பதைப் பார்த்து செய்வதறியாது தவித்தார்.
கோமேஸ் கதறி அழுவதைப் பார்த்த சோனின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய, ஸ்பர்ஸ் அணியினர் அவருக்கு ஆறுதல் கூறினர்.
இருந்தும் சோன் ஆறுதல் அடையாமல் தேம்பித் தேம்பி அழுதார். வேண்டுமென்றே படுகாயம் விளைவிக்காதபோதிலும் அபாயகரமாக விளையாடியதற்காக சோனுக்கு சிவப்பு அட்டையைக் காட்டி ஆட்டத்திலிருந்து வெளியேற்றினார் நடுவர்.
கோமே-சுக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

