புதுடெல்லி: இந்தியா- பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடந்ததோ வேறு. பூவா தலையாவில் வென்ற பங்ளாதேஷ் முதலில் பந்துவீசியது. அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.
ரோகித் சர்மா 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 15 ஓட்டங்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் 22 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பொறுப்புடன் ஆடிய ஷிகர் தவான் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் சேர்த்தது.
இதையடுத்து, 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்ளாதேஷ் களமிறங்கியது. அந்த அணியின் லித்தன் தாஸ், முகம்மது நயீம் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
லித்தன் தாஸ் 7 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். அடுத்து இறங்கிய சவுமியா சர்க்கார் நயீமுடன் அதிரடியாக ஆடினார். இருவரும் இணைந்து 46 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் நயீம் 26 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.
அடுத்து இறங்கிய முஷ்ஃபிகுர் ரஹிம், சவுமியா சர்க்காருடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார்.
கிடைத்த பந்துகளில் ஒன்று, இரண்டு, பவுண்டரி என அடித்தனர். இந்த ஜோடி 62 ஓட்டங்கள் சேர்த்தபோது சவுமியா சர்க்கார் ஆட்டமிழந்தார். சர்க்கார் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அப்போது பங்ளாதேஷ் 18 பந்துகளில் 35 ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில், பங்ளாதேஷ் அணி 3 விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. முஷ்ஃபிகுர் ரஹிம் அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.
இது டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக பங்ளாதேஷுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டி20 தொடரில் 1-0 என பங்ளாதேஷ் முன்னிலை வகிக்கிறது.

