சிங்கப்பூர் காற்பந்துக்குழுவில் மாற்றங்கள்

சிங்கப்பூர் காற்பந்துக்குழுவில் மாற்றங்கள்

2 mins read
a2d28cea-b5eb-42d8-8f26-30d88817b868
குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் டட்சுமா யோஷிடா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்றில் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஏமனுடன் சிங்கப்பூர் குழு பொருதவுள்ளது.

இதை முன்னிட்டு சிங்கப்பூர் குழு பயிற்றுவிப்பாளர் டட்சுமா யோஷிடா, 22 வீரர்கள் கொண்ட குழுவை நேற்று முன்தினம் அறிவித்தார்.

கடந்த மாதம் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோற்றிருந்தது. இந்நிலையில், ஏமனுக்கு எதிராக களமிறங்கும் சிங்கப்பூர் குழுவில் நான்கு மாற்றங்களை யோஷிடா செய்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட தற்காப்பு ஆட்டக்காரர் ஷகிர் ஹம்சா, இக்குழுவில் இடம்பெறுகிறார். சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் ஹோம் யுனைடெட் குழுவிற்காக விளையாடி வரும் இக்ரம் ரஃபிக்கியும் குழுவில் இணைகிறார்.

கம்போடிய குழுவுக்கு எதிராக கடைசியாக 2016ஆம் ஆண்டு நவம்பரில் சிங்கப்பூருக்காக களமிறங்கிய சஹில் சுஹைமியும் ஏமனுக்கு எதிரான குழுவில் இடம்பெறுகிறார்.

இவ்வாண்டு மார்ச்சில் ஓமானுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தில் கடைசியாக சிங்கப்பூருக்காக விளையாடிய கைருல் நிஸாமும் இக்குழுவில் இணைகிறார்.

"அண்மைகாலமாக இக்ரம் சிறப்பாக விளையாடி வருவதை நான் கண்டுள்ளேன். எனவே, தேசிய அளவிலும் சிறப்பான ஆட்டத்திறனை இவர் தொடருவதற்கு இது ஒரு சிறந்த தருணம்.

"சஹிலைப் பொறுத்தவரை, ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர். தாக்குதலில் இக்சான் ஃபாண்டிக்கு நிஸாம் பக்கபலமாக திகழ்வார்," என்றார் யோஷிடா.

உலகத் தரவரிசைப் பட்டியலில் 159வது நிலையில் உள்ள சிங்கப்பூர் குழு, ஏமனுடனான ஆட்டத்திற்கு முன்பாக இம்மாதம் 14ஆம் தேதி டோஹாவில் நடைபெறும் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் ஏஎஃப்சி ஆசிய கிண்ண வெற்றியாளரான கத்தாருடன் பொருதவுள்ளது.

உலகத் தரவரிசைப் பட்டியலில் 59வது நிலையில் கத்தார் உள்ளது.

அதன் பின்னர் ஐந்து நாட்கள் கழித்து பக்ரேனில் ஏமனுடன் சிங்கப்பூர் பொருதவுள்ளது. உலகத் தரவரிசையில் 141வது இடத்தில் ஏமன் உள்ளது.

"கத்தாருக்கு எதிரான ஆட்டத்தின் மூலமாக எங்களுக்கு அனுபவம் கிடைக்கும்," என்றார் யோஷிடா.