சமநிலை கண்ட செல்சி

சமநிலை கண்ட செல்சி

2 mins read
f4b50bd1-8d9e-4c01-a8ff-33d97058c967
நான்காவது கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்து கொண்டாடும் செல்சி ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் இங்கிலாந்தின் செல்சிக்கும் ஹாலந்தின் அயெக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவுக்கும் இடையே விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் 4-1 எனும் கோல் கணக்கில் பின்தங்கியிருந்த செல்சி, மனந்தளராமல் விளையாடி ஆட்டத்தைச் சமன்செய்தது. இறுதியில் ஆட்டம் 4-4 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. முற்பாதி ஆட்டத்தில் செல்சியின் டேமி ஆபிரகாம் கேப்பா அரிசாபலாகாவும் போட்ட சொந்த கோல்கள் செல்சியைத் தோல்வியின் விளிம்புக்குக் கொண்டு சென்றது.

இடைவேளையின்போது அயெக்ஸ் 3-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டத்தில் அயெக்ஸ் ஆட்டக்காரர்கள் இருவருக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாகக் கிட்டத்தட்ட கடைசி 20 நிமிடங்களுக்கு அயெக்ஸ் வெறும் ஒன்பது ஆட்டக்காரர்களுடன் விளையாடியது.

இந்த நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட செல்சி, இரண்டு கோல்களைப் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்து ஒரு புள்ளி பெற்றது.

மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூலும் பெல்ஜியத்தின் கெங்க் குழுவும் மோதின. இதில் லிவர்பூல் 2-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. இதன்மூலம் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அது வலுப்படுத்தியுள்ளது. ஒன்பது புள்ளிகளுடன் லிவர்பூல் 'இ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியை எதிர்கொள்வதால் லிவர்பூல் அதன் முக்கிய வீரர்களுக்கு கெங்க் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு வழங்கியது.

ஃபெர்மினோ, மானே போன்ற நட்சத்திரங்கள் மாற்று ஆட்டக்காரர்களாக இருந்தும் லிவர்பூல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இத்தாலியின் இன்டர் மிலானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மண்ட் எதிர்பாராத விதமாக 3-2 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றோர் ஆட்டத்தில் நெப்போலியும் சால்ஸ்பர்க்கும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. பார்சிலோனா- சிலாவியா பிராக் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.