பலத்தைக் காட்டிய ரியால்

மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ஸ்பானிய லீக் ஜாம்பவான் ரியால் மட்ரிட் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. துருக்கியின் காலடாசரேவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கோல் மழை பொழிந்த ரியால், 6-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.

ஆட்டம் தொடங்கி ஏழு நிமிடங்களுக்குள் ரியாலின் ரொட்ரிகோ இரண்டு கோல்களைப் போட்டு சாதனை படைத்தார். இந்த அபாரத் தொடக்கம் ரியாலை வெற்றியின் பாதைக்குக் கொண்டு சென்றது.

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ரியாலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்கினார்  ரமோஸ். 45வது நிமிடத்தில் கரீம் பென்சிமா ரியாலின் நான்காவது கோலைப் போட்டார். இடைவேளையின்போது 4-0 எனும் கோல் கணக்கில் ரியால் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் பென்சிமா மீண்டும் கோல் அடித்தார். ஆட்டம் முடிய சில வினாடிகள் இருந்தபோது ரொட்ரிகோ தமது ‘ஹாட்ரிக்’கைப் பதிவு செய்தார். 

மற்றோர் ஆட்டத்தில் ரெட் ஸ்டார் பெல்கிரேட் குழுவை 4-0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் பந்தாடியது. அண்மையில் எவர்ட்டன் வீரர் ஆண்ட்ரே கோமேசுக்குத் தெரியாத்தனமாகப் படுகாயம் விளைவித்து மிகவும் வருத்தப்பட்ட தென்கொரிய நட்சத்திர வீரர் சோன் ஹியூங் மின் இரண்டு கோல்களைப் போட்டு ஸ்பர்சின் வெற்றிக்கு வித்திட்டார்.

மான்செஸ்டர் சிட்டிக்கும் அட்லான்டாவுக்கும் இடையிலான ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் சிட்டி கோல் போட்டு முன்னிலை வகித்தது. 

ஆனால் ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் அட்லான்டா கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தது.

ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் சிட்டியின் மாற்று ஆட்டக்காரர் கிளோடியோ பிராவோவுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக தற்காப்பு ஆட்டக்காரர் கைல் வாக்கர் கோல்காப்பாளராகக் களமிறங்கினார். வெற்றி கோலைப் போட அட்லான்டா மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்த வாக்கர், சிட்டி ஒரு புள்ளி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.

லோக்கோமோட்டிவ் மாஸ்கோவை 2-1 என வீழத்திய யுவென்டஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஒலிம்பியாகோசை 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்த பயர்ன் மியூனிக் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியது.