‘சிக்சர் சக்கரவர்த்தி’ ரோகித்

ராஜ்கோட்: 2017ல் 65, 2018ல் 74, 2019ல் இதுவரை 66. இது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கடந்த மூன்றாண்டுகளில் அனைத்துலகப் போட்டிகளில் அடித்த சிக்சர்களின் எண்ணிக்கை. இந்த மூன்றாண்டுகளிலும் வேறு எந்த ஒரு வீரரும் இவரைவிட அதிகமாக சிக்சர் அடித்ததில்லை.

பங்ளாதேஷ் அணிக்கெதிராக ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வென்றே ஆக வேண்டிய நெருக்கடியில் இருந்தது. ஆனால், யுஸ்வேந்திர சகல், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சாலும் இத்தொடருக்கான அணித்தலைவர் ரோகித் சர்மாவின் அற்புதமான பந்தடிப்பாலும் இந்திய அணி மிக எளிதாக வென்றது.

இந்த ஆட்டம் ரோகித்துக்கு நூறாவது அனைத்துலக டி20 போட்டி.  23 பந்துகளில் அரை சதத்தை எட்டிய இவர், சதத்தை நோக்கி பீடு நடை போட்டதால் ‘நூறாவது டி20 போட்டியில் நூறு ஓட்டங்களை அடித்த முதல் ஆட்டக்காரர்’ என்ற சாதனையையும் படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 43 பந்துகளில் 85 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து, அந்த எதிர்பார்ப்பைப் பொய்த்துப் போகச் செய்தார் ரோகித். 

இந்த ஆட்டத்திலும் ஆறு சிக்சர்களை இவர் விளாசினார். இதன்மூலம், டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை (34) விளாசிய இந்திய அணித்தலைவர் என்பதையும் தனது சாதனைப் பட்டியலில் இணைத்துக்கொண்டார் ரோகித். முன்னாள் இந்திய அணித்தலைவர் டோனி 62 இன்னிங்ஸ்களில் 34 சிக்சர்களை விளாசியிருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. டோனியை முந்த ரோகித்துக்கு 17 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டன.

“சிக்சர் அடிப்பதற்குப் பயில்வான் போல இருக்கத் தேவையில்லை. நோஞ்சான்போல இருக்கும் சகல் கூட அடிக்க முடியும். சக்தி வேண்டாம், சரியான நேரத்தில் பந்தை அடிப்பதே முக்கியம்,” என்கிறார் ரோகித்

முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்தது. ஷிகர் தவானும் ரோகித்தும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ஓட்டங்களைக் குவித்தனர். இருவரும் இணைந்து நூறு ஓட்டங்களுக்கு மேல் சேர்த்தது இது 4வது முறை. இதுவும் ஒரு சாதனை. 

ஷ்ரேயாஸ் ஐயர் 13 பந்துகளில் 24 ஓட்டங்களை எடுக்க, 26 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியைச் சுவைத்தது. 3வது, கடைசி டி20 போட்டி நாக்பூரில் நாளை நடக்கிறது.