யூரேப்பா லீக் காற்பந்துப் போட்டியில் பார்ட்டிஸான் பெல்கிரேட் குழுவை நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மான்செஸ்டர் யுனைடெட் குழு, இந்தப் பருவத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று தனக்குத் தானே ஒரு முன்மாதிரியை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அதன் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் கூறியுள்ளார்.
ஆட்டத்தின் முதல் பாதியில் மேசன் கிரீன்வுட், ஆன்டனி மார்சியால் ஆகியோர் தலா ஒரு கோல் போட, இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கி நான்கு நிமிடங்களிலேயே மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் போட்ட மூன்றாவது கோலைத் தொடர்ந்து இறுதியில் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் பார்ட்டிஸான் குழுவை வெற்றி கொண்டது.
இதன்மூலம் 'எல்' பிரிவில் முதல் நிலையில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் பற்றி கருத்துக் கூறிய சோல்சியார், "பல சமயங்களில் ஒரு கோல் போட்டபின் அடுத்த கோல் போட முடியாமல் தவித்திருக்கிறோம். ஆனால் இந்தக் குழுவிலுள்ள வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் நன்கு விளையாடும்போது எப்படி விளையாட வேண்டும் என்பதில் மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்குகிறார்கள்," என்று புகழாரம் சூட்டினார்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் எதிரணியினர் இதுபோல் இல்லை என்றாலும் இந்த ஆட்டம் கற்றுத் தந்துள்ள பாடங்கள் அவற்றுக்கும் பொருந்தும் என்றார் சோல்சியார்.
இந்தப் பருவத்தின் யூரோப்பா லீக்கில் தான் விளையாடிய ஆட்டங்களில் எதிரணியினரை கோல் எதுவும் போட விடாமல் இருக்கும் ஒரே குழு மான்செஸ்டர் யுனைடெட்.
அத்துடன், இதுவரை விளையாடிய 15 யூரோப்பா லீக் ஆட்டங்களிலும் அக்குழு எதிலும் தோல்வி அடையாதது இங்கு நினைவுகூரத்தக்கது.
நேற்று அதிகாலை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் இங்கிலாந்தின் உல்வ்ஸ் குழு, ஸ்லோவான் பிராட்டிஸ்லாவா குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

