தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

நாக்பூர்: இந்திய, பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது. 

தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் பங்ளாதேஷை இந்திய அணி வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலை கண்டுள்ளது. 

ராஜ்கோட்டில் தொடர் வெற்றியைப் பெறுவதற்கான பங்ளாதேஷின் நம்பிக்கையை முற்றிலுமாக தகர்த்தெறிந்த பந்தடிப்பாளர் ரோகித் சர்மா (படம்), 43 பந்துகளில் 85 ஓட்டங்களை எடுத்தார்.

இந்நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி உட்பட சில மூத்த வீரர்கள் இத்தொடரில் இடம்பெறாத நிலையில், அணியில் சேர்க்கப்பட்டுள்ள இளம் வீரர்களின் ஆட்டத்திறனை அடையாளங்காண இத்தொடர் வாய்ப்பளிக்கிறது.

டெல்லியிலும் ராஜ்கோட்டிலும் நடைபெற்ற முதல் இரு டி20 போட்டிகளுக்கான அணித் தேர்வில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. டி20 தொடரை இந்தியா வெல்லக்கூடும் என்றாலும் அதற்கு பங்ளாதேஷ் முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
Load next