இபிஎல்: யுனைடெட், பிரைட்டன் இன்று மோதல்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இன்றிரவு 10 மணிக்கு நடைபெறும் ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட், பிரைட்டன் காற்பந்துக் குழுக்கள் பொருதுகின்றன.

கடந்த வாரயிறுதியில் லீக்கில் போர்ன்மத் குழுவிடம் தோல்வியுற்ற யுனைடெட், யூரோப்பா லீக் போட்டியில் நேற்று முன்தினம் அதிகாலை பார்ட்டிஸான் பெல்கிரேட் குழுவை 3-0 கோல் கணக்கில் வீழ்த்தியது.

யுனைடெட் வீரர்களுக்கு அந்த வெற்றி புதுத்தெம்பு தந்துள்ளது.  எனவே, அந்த வெற்றிப் பயணம் இன்றைய ஆட்டத்திலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

லீக் பட்டியலில் 10வது இடத்தில் உள்ள யுனைடெட்டைவிட இரு புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ள பிரைட்டன், எட்டாவது இடத்தில் உள்ளது. தனது சொந்த அரங்கில் நடைபெறும் இந்த ஆட்டத்தில்   யுனைடெட் வென்றால், லீக் பட்டியலில் மேலேறுவதற்கான வாய்ப்பு அதற்கு கிடைக்கும்.