ஆர்சனல் ஏமாற்றம்; அதிரடி காட்டிய லெஸ்டர்

லெஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் ஆர்சனலை 2-0 எனும் கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டி வீழ்த்தியது. லெஸ்டரின் இரண்டு கோல்களை ஜேமி வார்டியும் ஜேம்ஸ் மேடிசனும் போட்டனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு லெஸ்டர் முன்னேறியுள்ளது. செல்சியும் லெஸ்டரும் 26 புள்ளிகள் பெற்றுள்ளன. செல்சியைவிட கூடுதல் கோல் போட்டிருக்கும் லெஸ்டர் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில்  இரண்டாம் இடத்துக்குச் சென்றுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, ஆர்சனல் தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் தோல்வியைத்  தழுவியுள்ளது. இதனால் அக்குழுவின் நிர்வாகியான உனாய் எமெரியின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் கோல் போட்ட நட்சத்திர வீரர் ஜேமி வார்டியை லெஸ்டரின் நிர்வாகி பிரெண்டன் ரோஜர்ஸ் பாராட்டினார். “ஐரோப்பிய காற்பந்துப் போட்டிகளில் விளையாடும் ஆகச் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்களில் ஜேமி வார்டியும் ஒருவர். 

“அவருக்கு விருப்பமான வகையில் விளையாட  முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். கோல் போட வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் அவற்றை அவர் நழுவவிடுவதில்லை,” என்று ரோஜர்ஸ் தெரிவித்தார். 

ஸ்பானிய லீக் 

ஸ்பானிய லீக் காற்பந்து ஆட்டத்தில் செல்டா விகோவை 4-1 எனும் கோல் கணக்கில் பந்தாடிய பார்சிலோனா லீக் பட்டியலின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. பரம வைரி ரியால் மட்ரிட்டைப் போலவே 25 புள்ளிகள் பெற்றுள்ளபோதும் கோல் வித்தியாச அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது பார்சிலோனா. செல்டா விகோவுக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி  மூன்று கோல்களைப் போட்டு தமது அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மற்றோர் ஆட்டத்தில் எய்பார் குழுவை 4-0 எனும் கோல் கணக்கில் பிழிந்தெடுத்தது ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டியில் மற்றொரு ஜாம்பவானான ரியால் மட்ரிட்.

ஜெர்மன் காற்பந்து லீக்

ஜெர்மன் காற்பந்து லீக் நடப்பு வெற்றியாளர் பயர்ன் மியூனிக் கோல் மழை பொழிந்து  4-0 எனும் கோல் கணக்கில் பொருசியா டோர்ட்மண்ட் குழுவை எளிதில் ஓரங்கட்டியது. லீக் போட்டியில் அதிக கோல்கள் போட்டிருக்கும் லெவண்டோவ்ஸ்கி இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்டார்.