மீண்டும் சூப்பர் ஓவரில் தோற்ற நியூசிலாந்து

ஆக்லாந்து: இங்கிலாந்து அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 

கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. மழை காரணமாகப் போட்டி தடைபட்டதால் 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது. 

முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. மார்டின் கப்டில் 20 பந்துகளில் அரைசதமும் மன்ரோ 21 பந்துகளில் 46 ஓட்டங்களும் சீஃபர்ட் 16 பந்துகளில் 39 ஓட்டகளும் எடுத்தனர். 

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 7 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. 

வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. 

உலகக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் இங்கிலாந்துடன் சமநிலை கண்டிருந்த நியூசிலாந்து அணி, அதிலும் சூப்பர் ஓவரில் கிண்ணத்தைப் பறிகொடுத்தது.

அதற்குப் பழிதீர்க்க நல்லதொரு வாய்ப்பாக  நியூசிலாந்துக்கு நேற்றைய ஆட்டம் இருந்தது.

ஆனால், சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. 

சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 17 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியால் 8 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

ஆட்ட நாயகன் விருது இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது.