முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த போட்டியில் லிவர்பூல் குழு 3-1 என மான்செஸ்டர் சிட்டியை ஓரங்கட்டியது. இதில் லிவர்பூல் குழுவின் கோல்களை நம்பமுடியாத அற்புதமான கோல்கள் என அதன் நிர்வாகி யர்கன் கிளோப் வர்ணித்துள்ளார்.

இவ்வெற்றியின் மூலம் பட்டியலின் முதலிடத்திலுள்ள லிவர்பூல், அடுத்த நிலையிலுள்ள லெஸ்டர் சிட்டியைவிட எட்டுப் புள்ளிகள் அதிகம் பெற்று, தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டுள்ளது. 

ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே லிவர்பூலின் முதல் கோலைப் போட்டார் ஃபேபின்யோ. அதற்குமுன்,  டிரண்ட் ஆர்னல்ட் அலெக்சாண்டர் பந்தைக் கையால் தடுத்தார் என்று கூறி மான்செஸ்டர் சிட்டி தனக்கு பெனால்டி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியது. ஆனால், காணொளி உதவி நடுவர் மூலம் சிட்டியின் கோரிக்கையை நிராகரித்தார் கள நடுவர். 

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் ஆண்டி ராபர்ட்சன் கொடுத்த பந்தை, அது தரையில் பட்டு எழும்பியபோது தலையால் முட்டி கோல் போட்டார் முகம்மது சாலா. பின்னர் ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கிய 6வது நிமிடத்திலேயே ஜோர்டான் ஹெண்டர்சன் தந்த பந்தை சாடியோ மானேயும் தலையால் முட்டி கோலாக்கினார்.

இப்படி மூன்று கோல்கள் வாங்கிய சிட்டி குழு, பின்னர் 78வது நிமிடத்தில் பெனார்டோ சில்வா மூலம் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை 3-1 என முடித்துக்கொண்டது. 

இந்த ஆட்டம் குறித்து கருத்துரைத்த யர்கன் கிளோப், “சிட்டி குழு நன்றாகவே விளையாடியது. அதனால், எங்களுடைய முழுத் திறனையும் கொண்டு தற்காத்து விளையாட வேண்டியிருந்தது. ஆனால், நாங்கள் நம்பமுடியாத, அற்புதமான கோல்களைப் போட்டோம். எமது குழுவினர் ஒருமித்த கவனத்துடனும் இலக்கு தவறாமலும் விளையாடினர். அது பார்க்க அற்புதமாக இருந்தது. சிட்டியை வெற்றிகொள்ள எங்களுக்குத் தெரிந்த வழி அது ஒன்றுதான்,” என்று தமது குழுவினருக்கு புகழ்மாலை சூட்டினார்.

மற்றோர் ஆட்டத்தில் பிரைட்டன் குழுவுடன் மோதிய மான்செஸ்டர் யுனைடெட் குழு பிரைட்டனை 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டது. 

ஆட்டம் தொடங்கிய 17வது நிமிடத்தில் ஆண்டிரியாஸ் பெரேரா கோல் போட, அடுத்த இரண்டு நிமிடங்களில் யுனைடெட் தந்த நெருக்கடியில் சிக்கித் தவித்த பிரைட்டன் சொந்தமாக ஒரு கோலை போட்டுக்கொண்டது. 

பின்னர், ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் பிரைட்டன் ஒரு கோல் போட்டு எழுந்து நிற்க, மீண்டும் அடுத்த இரண்டே நிமிடங்களில் யுனைடெட்டின் ரேஷ்ஃபர்ட் மேலும் ஒரு கோல் போட்டு அதன் வெற்றியை உறுதி செய்தார்.