மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

டூரின்: ஒரே வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது முறை தனக்குப் பதிலாக மாற்று வீரரைக் களம் இறக்கியதால் நட்சத்திர காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (படம்), தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கள நடுவர் இறுதி ‘விசிலை’ ஊதுவதற்கு முன்பே திடலைவிட்டு வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யுவென்டஸ்-இன்டர் மிலான் குழுக்களுக்கு இடையிலான இத்தாலிய லீக் ஆட்டம் நேற்று முன்தினம் பின்னிரவில் யுவென்டசின் அலையன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது. 

ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் ரொனால்டோவிற்குப் பதிலாக அர்ஜெண்டினாவின் பௌலோ டிபாலாவை மாற்று வீரராகக் களமிறக்கினார் யுவென்டஸ் நிர்வாகி மொரிசியோ சாரி.

அதன்பின் 22 நிமிடங்களுக்குப் பிறகு டிபாலா அடித்த கோலால் யுவென்டஸ் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ, நிர்வாகியைப் பார்த்து ஏதோ சொன்னதாகவும் ஆட்டம் முடிய மூன்று நிமிடங்களுக்கு முன்னரே வீரர்கள் உடைமாற்றும் அறைக்குச் சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.