‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

நாக்பூர்: பங்ளாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 30 ஓட்டங்களில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் அந்த அணி கைப்பற்றியது.

18வது ஓவரின் கடைசி பந்திலும் 20வது ஓவரின் முதலிரு பந்துகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தினார் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர். அனைத்துலக டி20 போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருப்பது இதுவே முதன்முறை.

அத்துடன், 3.2 ஓவர்களை வீசி ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து, ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தீபக், அனைத்துலக டி20 வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சையும் பதிவுசெய்தார்.

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. முதலிரு போட்டிகளில் விளையாடிய ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியாவிற்கு பதிலாக மணீஷ் பாண்டே இடம்பெற்றார்.

முதலில் இந்திய அணி பந்தடித்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய அணித்தலைவர் ரோகித் சர்மா 2 ஓட்டங்களிலும் ஷிகர் தவான் 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனாலும் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த லோகேஷ் ராகுலும் ஷ்ரேயாஸ் ஐயரும் விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்தி, ஓட்ட வேட்டையில் இறங்கினர். ராகுல் 35 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களைக் குவித்தார்.

அஃபிஃப் ஹொசைன் பந்துவீச்சில் தொடர்ந்து மூன்று சிக்சர்களை விளாசிய ஷ்ரேயாஸ் 33 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்தார். அனைத்துலக டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த முதல் அரை சதம் இதுதான். 

இறுதியில் 20 ஓவர்களில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களைச் சேர்த்தது.

இலக்கை விரட்டிய பங்ளாதேஷ் அணி லிட்டன் தாஸ் (9), சௌம்ய சர்க்கார் (0) எனத் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆயினும், முகம்மது நயீமும் (81) முகம்மது மிதுனும் (27) இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தனர். இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ஓட்டங்களைச் சேர்த்தனர்.

இருப்பினும், மிதுன் வெளியேறியதும் பங்ளாதேஷ் அணியின் சரிவு தொடங்கியது. 34 ஓட்டங்களில் எட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்த அந்த அணி, 19.2 ஓவர்களில் 144 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளையும் தட்டிச் சென்றார் தீபக் சாஹர். அத்துடன்,  சச்சின், கங்குலி, லட்சுமண், ஹர்பஜன் ஆகிய இந்திய முன்னாள் நட்சத்திரங்களும் சமூக ஊடகம் வழியாக அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.