ரோகித்: எல்லா புகழும் பந்து வீச்சாளர்களுக்கே

ரோகித்: எல்லா புகழும் பந்து வீச்சாளர்களுக்கே

2 mins read
7ed7558d-d1b1-4f60-bb01-8fe0f4314f28
பங்ளாதேஷ் அணிக்கு எதிரான 3வது டி20 ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியுடன் கைகுலுக்கும் ரோகித் சர்மா (இடது). படம்: ஏஎஃப்பி -

நாக்பூர்: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று டி20 தொடருக்கான அணித் தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பங்ளாதேஷுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

அணியின் வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறுகையில், "பந்து வீச்சாளர்

களால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நடுவரிசையில் பனித்துளியால் பந்துவீசுவது கடினமாக இருக்கும் என்பதை நான் அறிந்தேன். ஒரு கட்டத்தில் பங்ளாதேஷ் அணி வலுவான நிலையில் இருந்தது. கடைசி எட்டு ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 69 ஓட்டங்களே தேவைப்பட்டன. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றனர்.

"வீரர்களிடம் நாட்டுக்காக விளையாடுவதை நினைவில் வைத்து செயல்படும்படி நான் அறிவுறுத்தினேன். இந்தப் போட்டியில் எல்லா பாராட்டுகளும் பந்துவீச்சாளர்களையே சேரும்," என்றார்.

உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பு சில ஆட்டங்கள் மட்டுமே இருப்பதாக கூறிய ரோகித், அணியின் கலவை நன்றாக உள்ளதாகச் சொன்னார்.

"சில வீரர்கள் வாய்ப்பைத் தவற விட்டனர். அவர்களும் அணிக்குத் திரும்புவார்கள். அணியில் உள்ள எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதனால் வீரர்களைத் தேர்வு செய்வது தேர்வாளர்களுக்கும் விராத் கோஹ்லிக்கும் தலைவலியாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, தோல்வி குறித்து பங்ளாதேஷ் அணித் தலைவர் மஹ்முதுல்லா கூறுகையில், "டி20 போட்டியில் நாங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்கக்கூடிய வீரர் எங்களிடம் இல்லை. சாதுரியமாகவும் மனரீதியாகவும் நிலையாக செயல்பட்டால் மட்டுமே நாங்கள் முன்னேற்றம் காண முடியும்," என்றார்.