இந்தியா அபார பந்து வீச்சு

இந்தூர்: பங்ளாதே‌ஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முகம்மது ஷமி, அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பங்ளாதே‌ஷ் 150 ஓட்டங்களில் சுருண்டது. இந்தியா - பங்ளாதே‌ஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி தொடர்களில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நேற்று தொடங்கியது. பங்ளாதே‌ஷ் அணித் தலைவர் மொமினுல் ஹக் பூவா தலையாவில் வென்று பந்தடிப்பைத் தேர்வுசெய்தார். 

ஆடுகளத்தில் புற்கள் சற்று அதிகமாக இருந்ததால் இந்தியா உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகம்மது ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இம்ருல் கெய்சும், ‌ஷத்மன் இஸ்லாமும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். இந்திய வீரர்கள் தங்களது அபார பந்துவீச்சால் தொடக்க வீரர்களை எளிதில் ஆட்டம் இழக்கச் செய்தனர்.

இம்ருல் கெய்ஸ் 6 ஓட்டங்களில் உமேஷ் யாதவ் பந்திலும், ‌ஷத்மன் 6 ஓட்டங்களில் இஷாந்த் சர்மா பந்திலும் ஆட்டமிழந்தனர்.  அடுத்து வந்த மிதுன் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் பங்ளாதே‌ஷ் 31 ஓட்டங்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

நான்காவது விக்கெட்டுக்கு அணித் தலைவர் மொமினுல் ஹக் உடன் அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் இணைந்து ஆடினார்.  இந்த இணை பதற்றமின்றி விளையாடியது. இதனால் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் கவனமாக விளையாடியது.

முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை பங்ளாதே‌ஷ் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 63 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 22 ஓட்டங்களுடனும் முஷ்பிகுர் ரஹிம் 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இருவரும் இன்னிங்சை சிறப்பாகத் தொடங்கினர்.

இந்த இணையை இந்திய வீரர் அஸ்வின் பிரித்தார்.  பங்ளாதேஷ் 99 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மொமினுல் ஹக் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெஹ்முதுல்லா 10 ஓட்டங்களில் அஸ்வின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் 115 ஓட்டங்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

ஆறாவது விக்கெட்டுகளுக்கு முஷ்ஃபிகுர் ரஹிம் உடன் லிட்டன் தாஸ் இணைந்தனர். முஷ்ஃபிகுர் ரஹிம் 43 ஓட்டங்களிலும் மெஹிதி ஹசன் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் முகம்மது ஷமி பந்தில் ஆட்டமிழந்தனர். 

பங்ளாதே‌ஷ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். தைஜுல் இஸ்லாமை ஜடேஜா வெளியே அனுப்ப, அபு ஜயத்தை உமேஷ் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் விளைவாக பங்ளாதே‌ஷ் 150 ஓட்டங்களில் சுருண்டது.

இந்திய அணி சார்பில் முகம்மது ஷமி 3 விக்கெட்டும் அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர். பின்னர் இந்தியா முதல் இன்னிங்சைத் தொடங்கியது. ரோகித் சர்மா ஆறு ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். ஆனால் அதற்குப் பிறகு மயங்க் அகர்வாலும் செட்டேஸ்வர் புஜாராவும் இணைந்து இந்தியாவுக்காக ஓட்டங்களைக் குவித்தனர்.

ரோகித்தின் விக்கெட்டைச் சாய்த்தது போல, இவர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் சாய்க்க பங்ளாதேஷ் வீரர் கடுமையாகப் போராடியும் அவர்களால் முடியவில்லை.

முதல் நாள் ஆட்ட முடிவில் மயங்க் அகர்வால் 37 ஓட்டங்களும் புஜாரா 43 ஓட்டங்களும் எடுத்தனர். எனவே ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ஓட்டங்கள் எடுத்து இந்தியா வலுவான நிலையில் உள்ளது.  9 விக்கெட்டுகள் இருக்க, 64 ஓட்டங்கள் மட்டுமே இந்தியா பின்தங்கியுள்ளது.