குரூஸ் இரட்டை கோல்; ஜெர்மனி வெற்றி

பாரிஸ்: யூரோ 2020 காற்பந்துப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஜெர்மனி, நெதர்லாந்து, குரோவேஷியா, ஆஸ்திரியா ஆகிய அணிகள் உறுதி செய்யுள்ளன.

மூன்று முறை வெற்றியாளரான ஜெர்மனி 4-0 என்ற கோல்கணக்கில் பெலருஸ் அணியை சின்னாபின்னமாக்கியது.

தகுதிச் சுற்று போட்டியில் ‘சி’ பிரிவின் இந்த ஆட்டத்தில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனிக்காக இரட்டை கோல் போட்டார் ரியால் மட்ரிட் வீரர் டோனி குரூஸ்.

முன்னதாக ஜின்டரும் கோரெட்ஸ்காவும் தலா ஒரு கோல் போட்டிருந்தனர்.

இதற்கிடையே பெலருஸின் கோல் போடும் இரண்டு முயற்சிகளைச் சிறப்பாக தடுத்தாடினார் ஜெர்மனி கோல்காப்பாளர் மேனுவெல் நுவர்.

இதே பிரிவில் இன்னோர் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதிய வடக்கு அயர்லாந்து அணி 0-0 எனச் சமநிலை கண்டது.

இதனால் நெதர்லாந்து யூரோ காற்பந்துப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த குரோவேஷியா இ பிரிவு ஆட்டத்தில்  ஸ்லோவாகியாவுக்கு எதிராக விளையாடியது.

32வது நிமிடத்திலேயே கோல் போட்டு முன்னிலை பெற்றது ஸ்லோவாகியா.

அதை சமன் செய்ய போராடிய குரோவேஷியாவால், 56வது நிமிடத்தில்தான் முதல் கோலை போட முடிந்தது.

ஆனால் அடுத்தடுத்து இரு கோல்கள் விழுந்ததால், 3-1 என குரோவேஷியா வெற்றி பெற்றது.

இதற்கிடையே தப்பாட்டம் காரணமாக ஸ்லோவாகியாவின் மேக் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இப்பிரிவின் இன்னோர் ஆட்டத்தில், அஸர்பைஜான் அணியை 0-2 என எளிதில் வென்று யூரோ காற்பந்துப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளது வேல்ஸ்.

‘ஜி’ பிரிவில் வடக்கு மேசடோனியாவை 2-1 என வீழ்த்திய ஆஸ்திரியாவும் தகுதி பெற்றது. போலாந்து அணி 2-1 என்ற கோல்கணக்கில் இஸ்ரேலை வீழ்த்தியது.