சக வீரரை வசைபாடிய பேட்டின்சனுக்கு தடை

சிட்னி: சக வீரரை வசைபாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டியொன்றின் போது விக்டோரியாவுக்கும் குவீன்ஸ்லாந்து அணிக்கும் இடையேயான  போட்டி நடைபெற்றது.

அப்போது குவீன்ஸ்லாந்து வீரர் கேமரூன் கனான் என்பவர் மீது தாக்கிப்பேசும் வகையில் வசைமாரி பொழிந்ததாக பேட்டின்சன் மீது புகார் எழுந்தது.

போட்டி நடுவர்கள் ஜான் வார்ட், ஷான் கிரெய்க் ஆகியோர் இந்தப் புகாரை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.

தவற்றை ஒப்புக்கொண்ட ஜேம்ஸ் பேட்டின்சன், வீரர் மற்றும் நடுவர்களிடம் மன்னிப்புக் கேட்டார். 

கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறையாக ஒழுக்க விதிகளை மீறிய பேட்டின்சன் ஒரு போட்டியில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இதனால் வரும் வியாழக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான பிரிஸ்பன் போட்டியில் அவர் விளையாட முடியாது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தலைவர் டிம் பெய்ன் கூறும்போது, “இது துரதிர்ஷ்டவசமானது. டெஸ்ட் போட்டியை ஆடாமல் இழப்பது என்பது ஈடுசெய்ய முடியாதது.

“பேட்டின்சன் தன் தவற்றை உணர்வார் என்று எண்ணுகிறோம். ஆஸ்திரேலிய அணியில் இதற்கு இடமில்லை என்பதை அவர் விரைவில் உணர்வார்,” என்றார்.