லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழுவின் புதிய நிர்வாகியாகப் பதவியேற்றுள்ள மொரின்யோ நிர்வாகியாக தான் இதற்குமுன் செய்த தவற்றைத் திரும்ப செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஸ்பர்ஸ் நிர்வாகியாக நேற்று முன்தினம் முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி பொறுப்பில் இருந்து கடந்த 11 மாதங்களுக்கு முன் நீக்கப்பட்ட பிறகு, காற்பந்திற்கு அப்பாற்பட்டு தன் நேரத்தைச் செலவிட்டதாகவும் தன்னுடைய வாழ்க்கைத்தொழில் பற்றி பரிசீலனை செய்ததாகவும் அவர் சொன்னார்.
“நான் தற்பெருமையற்றவன். என் வாழ்க்கையை பரிசீலிக்கக்கூடிய அளவுக்கு நான் தற்பெருமையற்றவன்.
“நான் கடந்த ஆண்டை மட்டுமல்ல, முழு விஷயம், பரிணாமம், பிரச்சினைகள் அனைத்தையும் ஆய்வு செய்தேன். இதில் யாரையும் குறை சொல்வதிற்கில்லை.
“நான் தவறு செய்தேன் என்பதை உணர்ந்தேன். இனி நான் அதே தவற்றை மீண்டும் செய்யமாட்டேன். புதிய தவறுகள் செய்வேன். ஆனால் அதே தவற்றைச் செய்யமாட்டேன்,” என்று சொன்ன அவர் என்ன தவறு எனத் தெளிவாக குறிப்பிடவில்லை.
“என்னைப் பற்றிய பகுப்பாய்வில் நான் மிகவும் ஆழமாகச் சென்றேன். இது நான் வேலை செய்யாத முதல் பருவமாகும்.
ஆனால் அந்த இடைவெளி எனக்கு மிகவும் சாதகமாக இருந்தது,” என்றார்.
ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகியாக இருந்த பொக்கெட்டினோ அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து, கடந்த புதன்கிழமை மொரின்யோ புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். பொக்கெட்டினோவின் கீழ் ஸ்பர்ஸ் குழு கடந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால் எதிரணி மண்ணில் கடைசியாக நடந்த 12 ஆட்டங்களில் ஒன்றில் கூட ஸ்பர்ஸ் குழுவால் வெல்ல முடியவில்லை.