கோல்கத்தா: இந்திய, பங்ளாதேஷ் அணிகள் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் நேற்று விளையாடத் தொடங்கியது.
கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்பட்டது. பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டிக்கான இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள்தான் இந்தப் போட்டியிலும் விளையாடுகிறார்கள்.
பங்ளாதேஷ் அணியில் அல் அமின், தொடக்க ஆட்டக்காரர் நயிம் அழைக்கப்பட்டுள்ளனர். தைஜுல், மெஹதி நீக்கப்பட்டுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி என்பதால், பூவா தலையா போடுவதற்கு தங்கக் காசு பயன்படுத்தப்பட்டது. அதில் வென்ற பங்ளாதேஷ் அணித் தலைவர் பந்தடிப்பைத் தேர்வு செய்தார்.
இளஞ்சிவப்பு பந்தில் இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி இருக்குமோ என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்திய வீரர்களின் பந்துவீச்சு பங்ளாதேஷின் பந்துவீச்சு வரிசையை பதம் பார்த்தது.
மூன்று பங்ளாதேஷ் வீரர்களை டக் அவுட் செய்தனர் உமேஷ் யாதவும் முகமது ஷமியும். இரட்டை இலக்க ஓட்டங்களை எட்டிய சத்மான் இஸ்லாமை 29 ஓட்டங்களுக்கு வெளியேற்றினார் யாதவ்.
17 ஓவர்கள் வீசப்பட்டிருந்தபோது, ஐந்து விக்கெட்டுகளை இழந்து, 55 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது பங்ளாதேஷ்.
யாதவ் மூன்று விக்கெட்டுகளையும் ஷமி, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதற்கிடையே, முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர், “தற்போதைய நிலையில், இது மிகவும் சிறப்பு வாய்ந்த இந்திய அணி.
“ஐஸ்லாந்தில் உள்ள பனியில் விளையாடினாலும் சகாரா பாலைவனத்தில் உள்ள மணலில் விளையாடினாலும் அவர்களால் வெற்றிக்கான வழிகளைத் தேட முடியும்.
“இதனால் இதற்கு முன் இளஞ்சிவப்பு பந்தில் விளையாடினார்களா அல்லது இல்லையா என்பது ஒரு விஷயமே அல்ல,” என்றார்.