சிங்கப்பூரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு மறக்க முடியாத தினமாக விளங்கியது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் உட்பட ஒன்பது தெற்காசிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சிங்கப்பூர் வந்ததே ரசிகர்களின் உற்சாகத்திற்கு காரணம்.
சிங்கப்பூர் இந்தியர் சங்கத் திடலில் முதன்முறையாக நடத்தப்பட்ட ‘ஐசாஸ் கிண்ண டி10’ போட்டியில் பங்கேற்பதற்காக அந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் இங்கு வருகை புரிந்தனர். நான்காவது தெற்காசிய புலம்பெயர் மாநாட்டின் மூன்றாவது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த கிரிக்கெட் போட்டிக்கு தெற்காசிய ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ் நாடுகளைப் பிரதிநிதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் இங்கு விளையாடினர்.
டிராவிட்டுடன், இந்திய அணியின் முன்னாள் தலைவர் முகம்மது அசாருதீன், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஸாகிர் கான் உள்ளிட்ட பல வீரர்களும் இதில் பங்கேற்றனர்.
“உள்ளூர் வீரர்களுடன் இணைந்து பிரசித்திபெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள் முதன்முறையாக விளையாடியது சுவாரஸ்யமாக இருந்தது. இது சிங்கப்பூர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
“உள்ளூர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருப்பது எங்களுக்கு உற்சாகம் தருகிறது. எதிர்காலத்தில் இத்தகைய ஆட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது,” என்றார் இப்போட்டிக்கு முதுகெலும்பாக திகழ்ந்தவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான வினோத் ராய்.