ஃபாண்டி அகமதுவின் ஒப்பந்தத்தை நீடித்தது சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம்

ஃபாண்டி அகமதுவின் ஒப்பந்தத்தை நீடித்தது சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம்

1 mins read
7527123e-1936-4d9a-82e6-23d73c97dd34
சிங்கப்பூர் காற்பந்து நட்சத்திரம் ஃபாண்டி அகமது -

உள்ளூர் காற்பந்து நட்சத்திரம் ஃபாண்டி அகமதுவின் (படம்) ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போது 22 வயதுக்கு உட்பட்டோருக்கான சிங்கப்பூர் தேசிய குழுவின் பயிற்றுவிப்பாளராக ஃபாண்டி, 57, உள்ளார்.

பிலிப்பீன்சில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக தமது ஆட்டக்காரர்களுடன் அந்நாட்டிற்கு ஃபாண்டி புறப்பட்டார்.

நாளை மறுதினம் லாவோஸ் குழுவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சிங்கப்பூர் களமிறங்குகிறது.

முன்னதாக ஃபாண்டியின் ஒப்பந்தம் அடுத்த மாதம் 31ஆம் தேதி முடிவடைய இருந்தது.

இப்போது இவரது ஒப்பந்தம் எவ்வளவு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் வெளியிடவில்லை. எனினும், ஒப்பந்தம் ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

வெளிநாட்டு காற்பந்துக் குழுக்களிலிருந்து பயிற்றுவிப்பாளர் வாய்ப்புகளை ஃபாண்டி பரிசீலனை செய்வதாக அண்மைக் காலமாக வலம் வந்த வதந்திகளுக்கு சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தில் புதிய பொறுப்பை ஃபாண்டி ஏற்பார். 'ஹெட் ஆஃப் எலிட் யூத்' எனப்படும் அதிகாரபூர்வ பொறுப்பை ஏற்கவுள்ள இவர், தேசிய குழுக்களில் இடம்பெறுவதற்காக இளம் விளையாட்டாளர்களின் மேம்பாட்டிற்கான பாதையை உருவாக்குவார்.

அதன் ஒரு பகுதியாக, காற்பந்து வீரர்களுக்கான மதியுரை திட்டங்களையும் ஃபாண்டி வகுப்பார்.