30வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டு பிலிப்பீன்சில் நடைபெறுகிறது. வழக்கம் போல போட்டிகளின் அதிகாரபூர்வத் திறப்பு விழாவுக்கு முன்பே 22 வயதுக்குட்பட்டோருக்கான காற்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்று ஆரம்பிக்கிறது.
அதன்படி, ‘பி’ பிரிவு ஆட்டத்தில் இன்று சிங்கப்பூர் குழுவும் லாவோசும் மோதுகின்றன. பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் சிங்கப்பூர் குழுவின் முதல் ஆட்டம் என்பது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து நட்சத்திர வீரர்களான வி.சுந்தரமூர்த்தி-ஃபாண்டி அகமதுக்கு இடையே நடைபெற இருக்கும் வியூகப் போர் யாருக்குச் சாதகமாக முடியும் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இன்றிரவு மணிலாவில் உள்ள ரீசால் நினைவக விளையாட்டரங்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதும் சிங்கப்பூர் குழுவின்
பயிற்றுவிப்பாளராக ஃபாண்டி அகமதும் லாவோஸ் குழுவின் பயிற்றுவிப்பாளராக சுந்தரமும் உள்ளனர். அனைத்துலக அளவில் இருவரும் பயிற்றுவிப்பாளர்களாக மோதிக்கொள்வது இதுவே முதல்முறை.
தமது குழுவைக் காட்டிலும் சிங்கப்பூர் வலிமை வாய்ந்தது என்றும் வெற்றி பெற சிங்கப்பூருக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் 54 வயது சுந்தரம் தெரிவித்தார். இருப்பினும், சிங்கப்பூருக்காக விளையாடும் அனைத்து ஆட்டக்காரர்களைப் பற்றி தமக்கு நன்றாக தெரியும் என்று குறிப்பிட்ட சுந்தரம், அதுமட்டும்தான் தமக்கு இருக்கும் ஒரே ஒரு சாதகமான அம்சம் எனக் கூறினார்.
“இந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் விளையாடும் ஆட்டக்காரர்களையும் அது கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, தேசிய குழுவில் இடம்பெறும் ஆட்டக்காரர்களும் அக்குழுவில் இடம்பெறுகின்றனர். இந்தப் போட்டிக்காக சிங்கப்பூர் குழு நீண்டகாலமாக தயாராகி வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அக்குழுவின் ஆட்டக்காரர்கள் ஒன்றாக விளையாடி வருகின்றனர். மெர்லயன் கிண்ணத்தில் பதிவு செய்த வெற்றி, ஜப்பான் பயிற்சி முகாமில் பயிற்சி செய்தது ஆகியவை சிங்கப்பூருக்குக் கைகொடுக்கும். நாங்கள் சவால்மிக்க பிரிவில் இடம்பெற்றுள்ளோம். ஆனால் எங்களால் மற்ற குழுக்களுக்குக் கடுமையான போட்டியைத் தர முடியும் என நம்புகிறேன். ஆட்டம் நடைபெறும் நாளன்று நாங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் சுந்தரம்.
இதற்கிடையே, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி பயணத்தைத் தொடங்குவதே முக்கியம் என்றார் ஃபாண்டி.