புதுடெல்லி: நியூசிலாந்து பயணத்தில் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுமா என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சௌரவ் கங்குலி பதில் அளித்துள்ளார்.
இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 ஆட்டங்கள், மூன்று ஒருநாள் ஆட்டங்கள், இரு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகிறது.
நியூசிலாந்து பயணத்தில் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் சாத்தியம் உள்ளதா என்று கங்குலியிடம் கேட்கப்பட்டது.
“இதுகுறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. நியூசிலாந்து தொடருக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. சற்று பொறுத்திருந்து பாருங்கள்.
எதிர்காலத்தில் இந்திய அணி அதிக அளவு பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான ரசிகர்கள் இந்த போட்டியைப் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கங்குலி பதிலளித்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.
சொந்த மண்ணில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்ளாதேஷை எளிதாக வீழ்த்தியது.
பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுவதற்கு கங்குலி காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.