சிங்கப்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுகளின் இன்றைய ஆட்டத்தில் இந்தோனீசியாவுடன் பொருதுவதற்கு சிங்கப்பூரின் இளஞ்சிங்கப் படை (யங் லயன்ஸ்) நல்லதொரு தொடக்கத்தைக் காணும் என்று பயிற்றுநர் ஃபாண்டி அகமது, 57, குறிப்பிட்டுள்ளார். 11 ஆட்டக்காரர்களும் நல்ல முறையில் எழுச்சி பெற்றிருப்பதால் சாதகமான ஆட்ட முடிவை எதிர்பார்க்கிறோம் என்று அவர் நேற்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
“நடப்பு வெற்றியாளர் தாய்லாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்தோனீசியா புதிய உத்வேகத்தில் இருக்கும். வெல்வோம் என்ற நம்பிக்கை அந்த அணியிடம் இருக்கும். நாங்கள் பலவீனமான அணி என்று அவர்கள் (இந்தோனீசிய அணியினர்) கருதினால் வெளிப்படையான போட்டியாக அது மாறக்கூடும்.
“ஆட்டத்தின் போக்கை மாற்றி அதனை விரைவாக ஆட்கொள்ளக்கூடியவர்களாக இருப்பதால் அவர்களுக்குக் கடும் போட்டியைத் தர நாங்கள் தயாராக இருப்பது அவசியம்,” என்றார் ஃபாண்டி.
நேற்று முன்தினம் லாவோஸுடன் சமநிலை கண்டது குறித்து கருத்துக் கூறிய அவர், “லாவோஸை வெல்லக்கூடிய சாதக நிலை எங்களிடம் இருந்தது. இருப்பினும் வெல்ல வேண்டிய அழுத்தம் கூடியதன் காரணமாக சிலரால் சிறப்பாக ஆடமுடியாமல் போயிருக்கலாம்,” என்றார்.
ெசவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லாவோஸைக் கட்டுப்படுத்த லயன்ஸ் வீரர்கள் கடுமையாகப் போராடினர். 90 நிமிடங்களும் கடுமையானதாகவே இருந்தன. இருப்பினும் லாவோஸ் பெற்றிருக்கும் புள்ளியின் காரணமாக அரையிறுதிக்கு முன்னேற வேண்டிய கூடுதல் அழுத்தம் சிங்கப்பூர் அணியினருக்கு ஏற்பட்டது. செயல்பாட்டில் தொய்வு ஏற்பட அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இருப்பினும் பி பிரிவில் சிங்கப்பூர் நாளை தாய்லாந்தையும் டிசம்பர் 5ஆம் தேதி வியட்னாமையும் சந்திக்க வேண்டி உள்ளது.
“அடுத்தடுத்து முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெற நாங்கள் இந்தோனீசியாவை வெல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. கடினமான முயற்சிதான் என்ற
போதிலும் நம்பிக்கையுடன ஆடுவோம். லாவோஸுக்கு எதிராக ஆடியது போல இன்னொரு முறை நம்பிக்கை இழந்து ஆடுவதைத் தவிர்த்து எழுச்சிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,” என்று கூறியுள்ளார் திரு ஃபாண்டி.
இக்சான் ஃபாண்டியும் அவரது சக ஆட்டக்காரர்களும் லாவோஸின் சிறப்பு நிலைக்கு வெகுதூரத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கோல் போட கிடைத்த நான்கு வாய்ப்புகளை அவர்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்று கூறப்பட்டது.
அது பற்றி கூறிய பயிற்றுநர் ஃபாண்டி, “நாங்கள் நல்ல நிலையில் இருந்தபோதிலும் வெல்ல மாட்டோம் என்று கணிக்கத் தோன்றியது. அதனால் எரிச்சல் ஏற்பட்டது. லாவோஸுடன் ஆடியதை நினைத்துப் பார்க்க முடியாது. விரைவாக முன்னேறிச் செல்ல வேண்டிய போட்டித்தொடர் இது. எனவே இந்தோனீசியாவுக்கு எதிராக மீண்டும் புத்துணர்ச்சி பெற்றாக வேண்டும்,” என்றார்.
இன்றைய போட்டியில் சிங்கப்பூர் அணியைச் சந்திப்பது குறித்து கருத்து தெரிவித்த இந்தோனீசிய பயிற்றுநர் இன்ட்ரா ஜாஃப்ரி, “வெற்றியாளர் பட்டத்தைப் பெற்று மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளோம். எனவே கடுமையாகப் போராடுவோம்.
“தாய்லாந்தை வெல்வதற்காக வகுக்கப்பட்ட உத்தியின்படி கச்சிதமாகச் செயல்பட்டோம். அதனால் வென்றோம். இருப்பினும் சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும். அதற்குத் தேவைப்படும் சூழ்ச்சிகளை வகுத்துள்ளேன்,” என்றார்.