ஹைதராபாத்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹைதராபாத்தை சேர்ந்த அம்பதிராயுடு அறிவித்தார். பின்னர் அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
அண்மையில் நடந்த விஜய் ஹசாரே மற்றும் முஸ்தாக் அலி கிண்ணத்துக்கான போட்டியில் ஹைதராபாத் அணித் தலைவராக அம்பதிராயுடு இருந்தார்.
இதற்கிடையே, அவர் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்து இருந்தார்.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது. பணம் மற்றும் ஊழல்வாதிகளால் ஹைதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேறும் என்று அவர் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக தெலுங்கானா அமைச்சருக்கும் தனது புகாரை அவர் அனுப்பி இருந்தார்.
அம்பதிராயுடுவின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான அசாருதீன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அம்பதிராயுடுவை ‘விரக்தி அடைந்த கிரிக்கெட் வீரர்’ என்று அவர் வர்ணித்தார்.
அசாருதீனின் கருத்துக்குப் பதிலளித்த அம்பதிராயுடு, “இதை தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம். இந்த பிரச்சினை நம்மைவிட பெரியது. தனிப்பட்ட மோதலை விட்டுவிட்டு வருங்கால கிரிக்கெட் வீரர்களைக் காப்பாற்றுங்கள்,” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஊழல் புகார் கூறிய அம்பதிராயுடு மீது நடவடிக்கை எடுக்க ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்திருந்தது.
இது தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் விஜய் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
“அம்பதிராயுடு ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு இழிவு ஏற்படுத்தும் விதமாக பேசி இருக்கிறார்.
“அவர் விதிமுறைகளை மீறி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
“தலைமைச் செயல் அதிகாரி அம்பதிராயுடுவிடம் விசாரணை நடத்த இருக்கிறார்,” என்றார் விஜய் ஆனந்த்.
அம்பதிராயுடு முன்வைத்த குற்றச்சாட்டு ஹைதராபாத் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கத்துக்கு எதிராக அவர் அவதூறு பரப்புகிறார் என்று மேலிடம் கண்டனம் தெரி வித்துள்ளது.