லண்டன்: யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் ஃபிராங்க்ஃபர்ட் குழுவிடம் ஆர்சனல் தோற்றதையடுத்து, அதன் 18 மாத நிர்வாகியான உனை எமேரி (படம்) பதவி நீக்கப்பட்டார்.
ஆர்சனலின் சொந்த மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில் 2-1 எனத் தோற்றது ஆர்சனல்.
இதனால் கடைசி ஏழு போட்டிகளில் வெற்றியில்லாமல் தொடர்கிறது ஆர்சனல். 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு அக்குழுவின் மோசமான நிலையாகும் இது.
மேலும் இபிஎல் பட்டியலில் 6ஆம் தேதி அக்டோபருக்குப் பிறகு இபிஎல் போட்டியிலும் எந்த வெற்றியும் பெறாத ஆர்சனல், முதல் நான்கு இடத்தில் இருக்கும் குழுக்களைவிட எட்டு புள்ளிகள் குறைவாக பெற்றுள்ளது.
எனவே, 2018ல் அப்போதைய ஆர்சனல் நிர்வாகி வெங்கர் வெளியேறிய பிறகு, நியமிக்கப்பட்ட 48 வயது உனை எமேரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆர்சனல் குழுவின் தற்காலிக நிர்வாகியாக அக்குழுவின் முன்னாள் வீரரும் உதவியாளருமான ஃப்ரெடி லுங்பெர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, உல்வ்ஸ் குழு நிர்வாகி நுனோ எஸ்பிரிட்டோ சாண்டோ நிர்வாகியாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity