மணிலா: குறைந்த அளவிலான தாக்குதல் ஆட்டக்காரர்களைக் கொண்டுள்ள சிங்கப்பூர் காற்பந்துக் குழு பின்தங்கியுள்ளதாகக் கூறுகிறார் அதன் பயிற்றுவிப்பாளரான ஃபாண்டி அகமது.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு கோல் வித்தியாசத்தில் இந்தோனீசியாவிடம் தோற்றது கோல் எதுவும் போடாத சிங்கப்பூர் அணி.
இந்த ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ஃபாண்டி, “எங்கள் குழுவில் ஒன்று, இரண்டு தாக்குதல் ஆட்டக்காரர்களே உள்ளனர்.
“மற்ற அணிகளில் ஐந்து, ஆறு அல்லது ஏழு தாக்குதல் வீரர்கள் உள்ளனர். வட்டார அளவில் நாங்கள் இன்னும் பின்தங்கியுள்ளோம்.
“சிங்கப்பூர் அணியில் திறமையாளர்கள் சிலரே இருக்கிறார்கள். மற்ற ஆசியான் அணிகளில் இருப்பது போல் நிறைய திறமையாளர்கள் இல்லை.
“சிங்கப்பூர் அணி மாணவர்கள், தேசிய சேவையாளர்கள் போன்ற பகுதிநேர வீரர்களைக் கொண்டுள்ளது. எனவே அதிகம் எதிர்பார்க்க முடியாது.
“அவர்களுக்குப் பயிற்சியளிக்க மாலை ஆறு, ஏழு மணி வரை நாங்கள் காத்திருக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க அதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை,” என்று புலம்பினார்.
நேற்று முன்தினம் பிலிப்பீன்சில் நடைபெற்ற இப்போட்டியின் முற்பாதி ஆட்டம் கோல் எதுவும் இல்லாமல் சமநிலையில் இருந்தது.
பிற்பாதி ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில், இந்தோனீசியாவின் கோல் முயற்சியை அபாரமாக தடுத்தார் சிங்கப்பூர் கோல் காப்பாளர் ஜர்ஃபான் ரோஹைசாத்.
ஆனால் சிங்கப்பூரின் தற்காப்பு வீரர்கள் செய்த தவற்றால் 64, 84வது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டு வெற்றி பெற்றது இந்தோனீசியா.
“ஆட்டத்தின் முடிவு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இந்தோனீசியா ‘பி’ பிரிவில் இருக்கும் கடினமான அணிகளில் ஒன்றாகும்.
“இந்தப் போட்டி எங்களுக்கு மலையேறுவது போன்று கடும் சவாலாக இருக்கும். ஏனெனில் இனி வரும் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்,” என்று சொன்னார் ஃபாண்டி.
ஏற்கெனவே லாவோசிடம் 0-0 எனச் சமநிலை கண்ட சிங்கப்பூர் நாளை தாய்லாந்தையும் செவ்வாய்கிழமை வியட்னாமையும் 5ஆம் தேதி புருணையையும் எதிர்கொள்ளவுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity