டேவிட் வார்னர் முச்சதம்

டேவிட் வார்னர் முச்சதம்

2 mins read
2b5a5247-4a6d-4c4b-8aab-7ee29a84a297
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தனது முதல் முச்சதத்தை ருசித்தார். நான்கு விக்கெட் இழப்பிற்கு 589 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முக்கிய விக்கெட்டுகளை இழந்து 493 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. -

அடிலெய்டு: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டுவில் நேற்றுத் தொடங்கியது. முதலில் பந்தடிப்பைத் தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

டேவிட் வார்னர் 166 ஓட்டங்களுடனும், லாபுசாக்னே 126 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. 80வது ஓவரில் ஆஸ்திரேலியா 350வது ஓட்டத்தைத் தொட்டது.

இந்த இணையைப் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ‌ஷகீன்சா அப்ரிடி பிரித்தார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 369 ஆக இருந்தபோது மார்கஸ் லாபுசாக்னே 162 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்த இணை 2வது விக்கெட்டுக்கு 361 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து ஸ்டீவ் சுமித் களம் வந்தார். 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்த ஸ்டீவ் சுமித் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது முதல் முச்சதத்தை ருசித்தார். அவர் 389 பந்துகளைச் சந்தித்து 37 பவுண்டரியுடன் 335 ஓட்டங்களைத் தொட்டார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் விளாசிய 7வது வீரர் வார்னர் ஆவார்.

பாகிஸ்தான் அணிக்கெதிராக முச்சதம் விளாசிய 4வது வீரர், மேலும் அந்த அணிக்கெதிராக முச்சதம் விளாசிய இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் வார்னரைச் சாரும்.

இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 253 ஓட்டங்கள் குவித்து இருந்ததே வார்னரின் அதிகபட்ச தனிஆள் சாதனை ஆகும்.

இந்த ஆட்டத்தில் 335 ஓட்டங்களைத் தொட்ட வார்னர், ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.