சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தேதியை நாளை திங்கட்கிழமை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாயத்து, ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. இதன் பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும்.
தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் உள்ளன. இதில் புதிதாக ஓசூர், நாகர்கோவில், ஆவடி மாநகராட்சிகள் உருவாகி உள்ளதால் மாநகராட்சி உறுப்பினர் எண்ணிக்கை 1,064ஆக அதிகரித்துள்ளன.
ஆனால் நகராட்சிகளின் எண்ணிக்கை 148ல் இருந்து 121ஆகக் குறைந்துள்ளது. அதனால், நகர்மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 3,468 ஆகக் குறைந்துள்ளது. எந்தெந்தப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல், முறைமுகத் தேர்தல் என்ற பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நேரடியாகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளின் விவரம்: மாநகராட்சி உறுப்பினர்கள்-1,064, நகராட்சி உறுப்பினர்கள் - 3,468, பேரூராட்சி உறுப்பினர்கள்-8,288, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்-6,471, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-655, கிராம ஊராட்சி தலைவர்-12,524, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்-99,324, மொத்தம்-1,31,794 பதவிகள்.
மறைமுகத் தேர்தல் மூலம் நியமிக்கப்பட இருக்கும் பதவிகளின் விவரம்: மாநகராட்சி மேயர்-15, நகராட்சித் தலைவர்-121, பேரூராட்சித் தலைவர்-528, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்-388, மாவட்ட ஊராட்சி தலைவர்-31, மொத்தம்-1,083 பதவிகள்.
புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் உதயமாகி உள்ளன.
ஆனால் இந்த 5 மாவட்டங்களுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் நடத்தப்படாது என்றும் ஒருங்கிணைந்த பழைய மாவட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.