7,000 ஓட்டங்களை எட்டி 73 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஸ்மித்

அடிலெய்ட்: பாகிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் (படம்) 23 ஓட்டங்கள் எடுத்தபோது டெஸ்டில் 7,000 ஓட்டங்களைக் கடந்தார். இதன் மூலம் இந்த இலக்கை வேகமாக எட்டிய வீரர் என்ற மகத்தான சாதனையைத் தன்வசப்படுத்தினார். 70வது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஸ்மித் அதில் பந்தடித்த 126வது இன்னிங்சில் இச்சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் தனது 131வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை அடைந்ததே சாதனையாக இருந்தது. அவர் 1946ஆம் ஆண்டில் இதனைச் சாதித்தார். 73 ஆண்டு

களுக்குப் பின் ஸ்மித் அதனைச் சாதித்துள்ளார்.

இந்தச் சாதனைப் பட்டியலில் 3வது இடத்தில் இந்தியாவின் ஷேவாக்கும் (134 இன்னிங்ஸ்), 4வது இடத்தில் சச்சின் தெண்டுல்கரும் (136 இன்னிங்ஸ்), 5வது இடத்தில் விராத் கோஹ்லியும் (138 இன்னிங்ஸ்) உள்ளனர்.

முப்பது வயதான ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 26 சதம், 27 அரைசதம் உள்பட 7,013 ஓட்டங்கள் (சராசரி 63.75) சேர்த்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் 7,000 ஓட்டங்களைக் கடந்த 50வது வீரர் ஆவார். இவர்களில் 60 ஓட்டங்களுக்கு மேல் சராசரி கொண்ட ஒரே வீரர் ஸ்மித் மட்டும்தான். டான் பிராட்மேனின் ஒட்டுமொத்த ஓட்டங்களையும் (6,996 ஓட்டம்) ஸ்மித் தாண்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.