தங்கத்தைத் தக்கவைத்த ஸ்கூலிங்: ஒலிம்பிக்கில் இடம்

மணிலா: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தமது மகுடத்தை இழந்த ஸ்கூலிங் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தைத்  தக்கவைத்துக்கொண்டார்.

51.84 வினாடிகளில் பந்தயத்தை முடித்து முதலிடம் பிடித்தார்.

இரண்டாவது இடத்தில் வந்த சக வீரர் குவா செங் வென் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இருவரும் அடுத்த ஆண்டு தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

வியட்னாமின் பால் லீ ஙவேன் வெண்கலம் வென்றார்.

இதற்கிடையே, உருட்டுப் பந்துக்கான மகளிர் குழு பிரிவில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் அணி தங்கம் வென்றுள்ளது.

வெள்ளிப் பதக்கத்தை மலேசியாவும் வெண்கலத்தை பிலிப்பீன்சும் வென்றன.

நடப்பு வெற்றியாளராக இருந்த சிங்கப்பூரின் ஆண்கள் குழு பதக்கம் வெல்லத் தவறியது. ஐந்தாவது இடத்தை மட்டுமே அக்குழுவால் பிடிக்க முடிந்தது.