கொழும்பு: இலங்கையில் சமயம் சார்ந்த அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று அந்நாட்டுத் தலைநகர் கொழும்பின் பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சத் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து சமயங்களின் நலன்களை ஒரே ஓர் அமைச்சு மட்டும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவிடம் அவர் கூறினார்.
இலங்கையின் இன நல்லிணக்கத்தை மேம்படுத்த பரிந்துரைகளை முன்வைக்குமாறு இலங்கையின் தலைமைச் சட்ட அதிகாரி ஆயிஷா ஜினசேனா பேராயரைக் கேட்டுக்கொண்டபோது, இனம் சார்ந்த அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று ஈஸ்டர் தின தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பே இந்தியத் தூதரகம் தம்மை எச்சரித்ததாக பேராயர் கார்டினல் கூறினார்.
கிடைத்த தகவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இலங்கை அதிகாரிகள் செயல்பட்டிருக்க வேண்டும் என்று பேராயர் தெரிவித்தார்.
மாறாக, அதை அவர்கள் பொருட்டாக மதிக்கவில்லை என்று அவர் சாடினார்.
இது தலைமையின் பலவீனத்தைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பான விசாரணை மிகவும் மெதுவாக நடத்தப்பட்டதாக தெரிவித்த பேராயர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ஒரு மில்லியன் இலங்கை ரூபாய் தந்து தனது கடமை அத்துடன் முடிந்துவிட்டதாக அப்போதைய அரசாங்கம் எண்ணியதாக பேராயர் அதிருப்தி தெரிவித்தார்.
நாட்டின் உளவியல் துறையை அரசியலாக்கக்கூடாது என்று பேராயர் கார்டினல் கூறினார்.