பிலிப்பீன்சை அலறவிட்ட சிங்கப்பூர் குழு

மணிலா: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று பிலிப்பீன்சுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. ‘சாஃப்ட் பால்’  விளையாட்டில் பிலிப்பீன்ஸ் ஆட்டக்காரர்கள் வல்லவர்கள். கடந்த 1997ஆம் ஆண்டைத் தவிர மற்ற போட்டிகளில் வென்று மற்ற அணியினரால் அசைக்க முடியாத நிலையில் தங்க வேட்டையைத் தொடர்ந்தது பிலிப்பீன்ஸ் ஆண்கள் அணி. ஆனால், நேற்று அந்த அணியினர் சிங்கப்பூரிடம் வெற்றியைப் பறிகொடுத்து வேதனைப்பட்டனர்.

நியூ கிளார்க் சிட்டியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் ஆண்கள் அணி பிலிப்பீன்ஸ் அணியை 6-1 என்ற புள்ளிகளில் வீழ்த்தியது. இந்தப்  பந்து விளையாட்டில் சிங்கப்பூர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. அரை இறுதியில் இந்தோனீசியாவை 9-0 என்று பந்தாடிய பிலிப்பீன்ஸ் நேற்று ஏமாற்றமடைந்தது.