மலேசியாவின் மாதுரி கராத்தே போட்டியில் தங்கம்

மணிலா: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் கராத்தேயில் மலேசியாவின் புவனேசன் மாதுரி தங்கம் வென்றார்.  மணிலா உலக வர்த்தக மையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் குமித்தே (55 கிலோ) பிரிவில் இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் கம்சி டிப்பவானை 4-1 என்னும் புள்ளிகளில் மாதுரி வீழ்த்தினார். 

இதையும் சேர்த்து நேற்றுக் காலை வரை மலேசியா 37 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது.

20 வயதான மாதுரி இரு நாட்களுக்கு முன்னர் பெர்னாமா செய்தி நிறுவனத்துடன் பேசுகையில் தமது பெற்றோரின் விருப்பத்தின் பேரில் கராத்தே தற்காப்புக் கலையைக் கற்கத் தொடங்கியதாகக் கூறினார்.

தமக்கு ஏழு வயது இருந்தபோது பரத நாட்டியத்தில் ஆர்வம் ஏற்பட்டு அதனைக் கற்கத் தொடங்கியதாகக் கூறிய அவர் மூன்றாண்டுகளில் நிலைமை மாறிவிட்டது என்றார். 

பள்ளிக்கூட தலைமை ஆசிரியையான தமது தாயார் எஸ். கோகிலவாணி மாணவர்கள் விளையாட்டில் பயிற்சி பெறுவதைக் கண்ட பின்னர் தம்மையும் விளையாட்டில் ஈடுபடுமாறு ஊக்கமூட்டியதாக மாதுரி கூறினார். 

தமது தந்தை புவனேசனும் அதேபோல கூறியதால் கராத்தே மீது  கவனம் செலுத்தத் தொடங்கியதாகக் கூறிய அந்த இளம்பெண் தற்போது உலகளவில் பேசப்படும் வீராங்கனையாக ஜொலிக்கிறார்.

இவ்வாண்டு மே மாதம் சாபாவில் நடந்த 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம் உலகின் முதல்நிலை வெற்றியாளர் என்னும் நிலைக்கு உயர்ந்தார். அந்த உயரத்தை எட்டிப்பிடித்த இரண்டாவது மலேசியர் அவர்.

2017ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற 29வது தென்

கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான கராத்தே குழுப் பிரிவில் மாதுரி பங்கேற்று விளையாடினார். 

மாதுரியுடன் மதிவாணி, ஸ்ரீவர்மினி, ஷகிலா என இதர மூன்று இந்திய இளம்பெண்களும் பங்கேற்று கடுமையாகப் போராடி தங்கம் வென்றனர்.