எதிர்பார்ப்பை அதிகரித்த லெஸ்டர் சிட்டி

பர்மிங்ஹம்: நான்கு கோல்கள், அபார வெற்றி என காற்பந்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை லெஸ்டர் சிட்டி மீண்டும் வெல்லக்கூடுமோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த எதிர்பார்ப்பும் லெஸ்டர் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளதாக அடிபடும் பேச்சும் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார் அதன் நிர்வாகி பிரெண்டன் ரோஜர்ஸ்.

“நாங்கள் இந்த இடத்திற்கு வருவோம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

“எங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்தி நாங்கள் தொடர்ந்து நன்றாக விளையாட முயற்சி செய்வோம்,” என்றார் அவர்.

நேற்று ஆஸ்டன் வில்லாவை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய லெஸ்டர் குழு, மான்செஸ்டர் சிட்டியைவிட ஆறு புள்ளிகள் அதிகம் பெற்று இபிஎல் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் முதலிடத்தில் உள்ள லிவர்பூலைவிட லெஸ்டர் எட்டு புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளதும் பட்டத்தை வெல்தற்கான போட்டியில் லெஸ்டர் இணைந்துள்ளதை உறுதி செய்கிறது.

இப்பருவத்தில் லெஸ்டர் பெற்றுள்ள இந்த எட்டாவது தொடர் வெற்றி அக்குழுவின் ஆகச்சிறந்த தொடர் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் அக்குழுவிற்காக இரண்டு கோல்களையும் போட்டார் அதன் நட்சத்திர வீரர் ஜேமி வார்டி.

ஜேமி வார்டி 20வது நிமிடத்தில் கோல் வேட்டையைத் தொடங்கினார்.

அதன்பிறகு, 41வது நிமிடத்தில்  இன்னொரு லெஸ்டர் வீரர் போட்ட கோலையடுத்து, அக்குழுவின் வெற்றி வாய்ப்பு கிட்டதட்ட உறுதியானது.

முற்பாதி ஆட்டத்தின் காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின் போது ஆஸ்டன் வில்லாவின் ஜேக் கிரிலிஷ் ஒரு கோல் போட்டதால் லெஸ்டரின் முன்னிலை ஒன்றாக குறைந்தது.

ஆனால் ஆட்டம் மீண்டும் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் எவன்ஸ் ஒரு கோலும் 75வது நிமிடத்தில் ஜேமி வார்டி இன்னோர் கோலையும் போட மூன்று கோல்கள் வித்தியாசத்தில் லெஸ்டர் வெற்றி பெற்றது.

இதுவரை மொத்தம் 16 ஆட்டங்கள் முடிவுற்றுள்ள நிலையில் 38 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

2015-16ஆம் ஆண்டு லெஸ்டர் சிட்டி இபிஎல் பட்டத்தை வென்றபோது, 16 ஆட்டங்களின் முடிவில் பெற்றிருந்த புள்ளிகளைவிட இது அதிகம் என்பதால், லெஸ்டர் இவ்வாண்டும் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றே கூறப்படுகிறது.