தெற்காசிய விளையாட்டுகளில் இந்தியாவுக்கு 312 பதக்கங்கள்

தெற்காசிய விளையாட்டுகளில் இந்தியாவுக்கு 312 பதக்கங்கள்

1 mins read

காட்மண்டு: 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேப்பாளத்தின் காட்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேப்பாளம், பங்ளாதே‌ஷ், பூட்டான், மாலத்தீவு ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த 2,715 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 487 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

பதக்க வேட்டையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. நாள்தோறும் இந்தியர்கள் பதக்க அறுவடை நடத்தினர். இதே நிலைமை கடைசி நாளான நேற்றும் காணப்பட்டது. பதக்கப்பட்டியலில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என்று மொத்தம் 312 பதக்கங்கள் குவித்துப் புதிய சாதனைப் படைத்துள்ளது.

தெற்காசிய விளையாட்டு ஒன்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்கள் இதுதான். இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் 309 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது. இந்த விளையாட்டுத் தொடங்கிய 1984ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து வருவது நினைவு கூரத்தக்கது.