இந்தக் காற்பந்துப் பருவத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழு பல இளம் வீரர்களைக் களமிறக்கியுள்ளது.
அவர்களில் பலர் அணியை பல சந்தர்பங்களில் காப்பாற்றியுள்ளனர். அதுபோல்தான் நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அந்தக் குழுவின் ஆக இளம் வீரரான மேசன் கிரீன்வுட், அல்க்மார் அணிக்கு எதிராக இரண்டு கோல்கள் போட்டு மான்செஸ்டர் யுனைடெட் 4-0 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறக் காரணமாக விளங்கியுள்ளார்.
நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதி விறுவிறுப்பில்லாமல் இருந்ததாகவும் பின்னர் இரண்டாம் பாதி ஆட்டமே சூடு பிடித்ததாகவும் பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
இதில் ஆட்டத்தின் முதல் கோலை யுனைடெட்டின் ஆஷ்லி யங் போட்டாலும் அதற்குப் பின் இரண்டு கோல்களை ஆறு நிமிட இடைவெளிக்குள் போட்டு கிரீன்வுட் அசத்தியதாக காற்பந்து ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் முதல் கோல், கோல்காப்பாளர் பகுதியின் எல்லையிலிருந்து போடப்பட்டது என்பது ஒருபுறமிருக்க, இரண்டாவது கோலை இடது காலால் மிக அற்புதமாக போட்டதாக பிபிசி செய்தி கூறுகிறது. இதற்கு முன்னரும் அவர் முதல் 11 வீரர்களுள் ஒருவராக களமிறக்கப்பட்டபோதிலும் நேற்றுதான் அவர் இரண்டு கோல்கள் போட்டு தமது ஆட்டத் திறனை சந்தேகமற எடுத்துக் காட்டினார் என்று காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மான்செஸ்டர் யுனைடெட் விளையாடிய ஐரோப்பிய கிண்ண ஆட்டங்களில் இவர்தான் அதிக கோல்கள் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து ஆட்டங்களிலும் யுனைடெட்டில் இவரைவிட மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் மட்டுமே அதிக கோல்கள் போட்டுள்ளார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
பின்னர், ஆட்டத்தின் 62ஆம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை யுவான் மாட்டா ேகாலாக்கி யுனைடெட்டுக்கு அபார வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.
மேசன் கிரீன்வுட்டின் திறமை குறித்துப் பேசிய யுனைடெட் நிர்வாகி சோல்சியார், “அவர் கோல் போடுவதில் மற்றவர்களைவிட வேறு நிலையில் உள்ளார். கோல் எல்லைக்குள் அவர் இருந்தார் என்றால் அவர் நிச்சயம் கோல் வலையை நோக்கிப் பந்தை உதைப்பார் என்று நம்பலாம்.
“அவர் தான் விளையாடுவதற்கு என திடலில் இடத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடியவர். மேலும், வலம், இடது என இரு கால்களைக் கொண்டு கோல் போடக்கூடிய திறன் பெற்றவர். அவரது ஆட்டம் எனக்கு முழுத் திருப்தியைத் தந்துள்ளது,” என்று புகழ்மாலை சூட்டினார். மற்றோர் ஆட்டத்தில் இங்கிலாந்தின் உல்வ்ஸ் குழு பெசிக்டாஸ் குழுவை 4-0 என்ற அதே கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற வேறோர் ஆட்டத்தில் இரண்டு கோல் பின்னணியிலிருந்து 2-2 என ஸ்டாண்டர்ட் லியெஜ் குழுவுடனான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆர்சனல் சமநிலை கண்டு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.