லண்டன்: நார்விச் சிட்டி காற்பந்துக் குழுவை வீழ்த்த முடியாமல் போனதால் எட்டு ஆட்டங்களாக லெஸ்டர் சிட்டி பெற்று வந்த தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது.
கிங் பவர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நார்விச் வீரர் போட்ட சொந்த கோலால் லெஸ்டருக்கு எதிரான ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
போட்டியில் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது நார்விச். அக்குழுவின் புக்கி 26வது நிமிடத்தில் கோல் போட்டு முன்னிலை பெற்றுத் தந்தார்.
ஆனால், அடுத்த 12வது நிமிடத்தில் லெஸ்டரின் ஜேமி வார்டி தலையால் முட்டி உதைத்த பந்து, நார்விச் கோல்காப்பாளர் டிம் குரூல் மீது பட்டு கோலானது.
சமநிலை கண்ட ஆட்டத்தைத் தங்கள் வசப்படுத்த பிற்பாதி ஆட்ட நேரத்தில் இரு குழுக்களும் கடுமையாகப் போராடின.
பிற்பாதி ஆட்டம் தொடங்கிய மூன்று நிமிடத்தில் மேடிசனும் வார்டியும் பந்தைத் தட்டிச் சென்று லெஸ்டரின் வெற்றி கோலைப் போட முயன்றனர்.
ஆனால் அந்த பந்து கோல் கம்பத்தில் பட்டுச் செல்ல, அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அதேபோல், ஜேமி வார்டி உதைத்த இன்னோர் பந்தையும் எதிரணியின் கோல் காப்பாளர் டிம் குரூல் தடுத்துவிட்டார். இதை அடுத்து, கோல் எதுவும் விழாத நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இதனால் முதல் இடத்திலுள்ள லிவர்பூல் குழுவிற்கும் தனக்குமான புள்ளி இடைவெளியை லெஸ்டரால் மேலும் குறைக்க முடியாமல் போனது. லிவர்பூலைவிட அக்குழு 10 புள்ளிகள் குறைவாகப் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது.
பட்டத்தை வெல்லும் லெஸ்டரின் ஆசையில் விழுந்த இந்த அடியை பற்றி அதன் நிர்வாகி பிரண்டன் ரோஜர்சிடம் கேட்டபோது, “லிவர்பூல் உடனான புள்ளி இடைவெளி அதிகரிப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. பட்டம் வெல்வதைப் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை, மற்றவர்கள்தான் பேசுகிறார்கள்,” என்றார்.
முன்னதாக நடந்த ஆட்டத்தில், வாட்ஃபர்டை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய லிவர்பூல் 49 புள்ளிகளுடன் தனது முதல் நிலையை வலுவாக்கிக்கொண்டது.
இன்னோர் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ன்மத்திடம் செல்சி தோற்று அதிர்ச்சி அளித்தது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் 84வது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோல் விழுந்தது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து ஆட்டங்களாக பெற்று வந்த தொடர் தோல்விக்கு போர்ன்மத் முற்றுப்புள்ளி வைத்தது.