ராவல்பிண்டி: பத்து ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் இலங்கை வீரர் தனஞ்சய டி சில்வா (படம்).
இந்த அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதேபோல் நான்காவது நாள் ஆட்டமும் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் போட்டியின் கடைசி நாளான நேற்று முதல் இன்னிங்சிற்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது இலங்கை அணி.
சிறப்பாக பந்தடித்த அந்த அணி வீரர் தனஞ்சய டி சில்வா 166 பந்துகளில் 102 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய இலங்கை அணியினர் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி இது.