மட்ரிட்: ஸ்பானிய லா லீகா காற்பந்தின் முன்னணி குழுவான பார்சிலோனாவும் ரியால் சோஷியடாட் குழுவும் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.
சோஷியடாட் குழுவின் சொந்த அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் எதிரணியின் தப்பாட்டம் காரணமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பை மிக்கல் ஒயர்ஸ்பல் கோலாக மாற்றினார். இதனால் 12வது நிமிடத்தில் முன்னிலை பெற்றது சோஷியடாட். அதை, பார்சிலோனாவின் கிரீஸ்மேன் சமன் செய்தார். தொடர்ந்து மெஸ்ஸி உதைத்த பந்தை சுவாரெஸ் கோலாக்கியதால் பார்சிலோனாவின் கோல் எண்ணிக்கை இரண்டானது.
ஆனால் 62வது நிமடத்தில் அதற்குப் பதில் கோல் போட்டார் சோஷியடாட்டின் அலெக்சாண்டர் ஐசக். அதன்பிறகு கோல் எதுவும் விழாதததால் ஆட்டம் 2-2 எனச் சமனானது.
அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சோஷியடாட், 53% ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதுபோல் சோஷியடாட் வீரர்கள் உதைத்த பந்து எதிரணியின் கோல் பகுதியை 19 முறை எட்டிப் பார்க்க, பார்சிலோனாவோ வீரர்களால் எட்டு முறை மட்டுமே அவ்வாறு செய்ய முடிந்தது.